Friday, May 28, 2010

ஜாதி - தீண்டாமைக்கு எதிரான பயணம் தொடங்கியது


ஜாதி, தீண்டாமைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான 14.04. 2010 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் நீண்ட நெடிய பரப்புரைப் பயணத்தை தேனி மாவட்டம் போடி நகரில் தொடங்கியது.


தேனி, திண்டுக்கல், திருச்சி, கருர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் இப்பயணம் தொடர்ந்து செல்கிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 30 தோழர்கள் இப்பயணத்தில் பங்கேற்றுள்ளார்கள்.


பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் தொடரும் இப்பயணத்தை பொதுச் செயலாளர் விடுதலை.க.இராசேந்திரன் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.


கும்பகோணம் சிற்பி.இராசன் அவர்கள் இப்பயணம் முழுவதும் 30 நாட்களும் பங்கேற்று அனைத்து கிராமங்களிலும் மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்துகிறார். சுமார் 3 இலட்ச ருபாய் அளவுக்கு திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டுள்ள இப்பயணம் சிறப்பாக நடைபெற பதினைந்தாயிரம் ( 15000) ருபாயை நன்கொடையாக வழங்கினார். கும்பகோணம் வழக்கறிஞர் கீதாலயன் அவர்கள் பத்தாயிரம் (10000) ருபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். மீதத் தொகையை தோழர்கள் கூட்டங்களில் துண்டேந்தி திரட்டுகின்றனர்.


14.04.2010 அன்று போடி நகரில் தோழர்.க.சரவணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் முருகேசன், தமிழ்ப்பித்தன், திருப்பூர் இராவணன், பெரியகுளம் குமரேசன், தேனி முத்துப்பாண்டி ஆகிய தோழர்கள் தேனி மாவட்டம் முழுவதற்கும் உரிய முன்னேற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.


ஆதித்தமிழர் பேரவை மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்புகளின் தோழர்கள்சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தனர். பயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் விடுதலை.க.இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்டப்பொறுப்பாளர் நாகராசன், ஆதித்தமிழர் பேரவையின் பொறுப்பாளர்கள் துணடு அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.


நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் ஜாதி தீண்டாமைக் கொடுமைகள் - ஒரு கள ஆய்வு என்ற நூல் வெளியிடப்பட்டது. மதுரையில் இயங்கிவரும் எவிடன்ஸ் என்ற அமைப்பு தமிழக கிராமங்கள் மற்றும் நகரங்களில் இன்னும் தாண்டவமாடும் தீண்டமைக் கொடுமைகள் குறித்து நேரடியாக ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கையைத் தயாரித்திருந்தது. அந்த அறிக்கையினை பெரியார் திராவிடர் கழகம் நூலாக அச்சிட்டு இப்பயணத்தின் தொடக்கப் பொதுக்கூட்டத்தில் வெளியிட்டது. விடுதலை.க.இராசேந்திரன் அவர்கள் நூலை வெளியிட்டார். திருப்பூர் மாவட்டத்தலைவர் துரைசாமி, போடி சரவணன், போடி நாகராசன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர். நாளைமுதல் தேனி மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் பரப்புரை தொடர உள்ளது.


தேவாரம், உத்தமபாளையம், சின்னமனூர், கோடாங்கிபட்டி, தேனி ஆகிய பகுதிகளிலும் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிக் கலவரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தேனி மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் முதன் முறையாக எந்த சிக்கலும் இன்றி ஜாதி தீண்டாமை ஒழிப்புப்பிரச்சாரம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
-அதி அசுரன்

Sunday, May 2, 2010

புராணமும், கடவுள்களின் ஒழுக்கமும்

இந்து மதத்துக்கு ஆதாரமாகவும், மத தத்துவங்களாகவும், பண்டிதர்களிடையும், பாமர மக்களிடையேயும் செல்வாக்குப் பெற்றிருப்பவை புராணங்களேயாகும். அப்புராணங்கள் பெரிதும் சைவம், வைணவம் என்று சொல்லப்படும் இரு உட்சமயத்தைப் பொறுத்ததேயாகும். இன்று பெரிதும் வைணவம், சைவம் என்னும் இருசமயம்தான் இந்துமதமாய் இருந்து வருகின்றது என்றாலும், இந்துமதத்தில் சங்கரர் மதம், மத்துவாச்சார் மதம் முதலியவைகளும் அடங்கும். புராணக் கோட்பாடுகளின் படியும், வேதசாஸ்திரக் கோட்பாடுகளின்படியும், அநேக கடவுள்களும், அநேக தேவர்களும், அக்கடவுள்கள் ஆகியவர்களுக்குப் பல பெண்டு பிள்ளைகளும், குடும்பம் விவகாரங்களும், லீலை முதலிய காம விளையாட்டுகளும் கணக்கிலடங்காத அளவுக்கு உண்டு.

இக்கடவுள்களில் முக்கியமாகவும், பிரதானமாகவும் சொல்லப்படும் கடவுள்கள் மூன்று. இம்மூன்று கடவுள்களுக்கும் முதற்கூறிய பெண்டுபிள்ளை, குடும்பம், வீடுவாசல், லீலை, திருவிளையாடல் மற்றும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற உத்தியோகம், விருப்பு, வெறுப்பு, பொறாமை ஆகிய காமவிவகாரம் முதலிய குணங்களும் உண்டு. இவைகளை விவரிப்பதும், விளக்குவதும் தான் புராணம் என்று சொல்லப்படுவதாகும்.

இப்புராணக் கோட்பாடுகளின்படி பிரம்மாவின் உத்தியோகம் படைத்தல், விஷ்ணுவின் உத்தியோகம் காத்தல், சிவனுடைய உத்தியோகம் அழித்தல். இந்த மூன்று இலாக்காக்களின் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்கள் வேலை செய்து கொண்டு வருகிறார்களாம். இவர்களின் யோக்கியதையைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இவர்களின் யோக்கியதை முழவதையும் எழுதுவதென்றால் இப்புத்தகம் இடங்கெடாது என்று அஞ்சுகிறோம். ஆகையால், ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு பதம் என்னும் பழமொழியை அனுசரித்து இம்மும்மூர்த்திகளின் யோக்கியதையைக் கூடியவரையில் சுருக்கமாகவே ஆராய்வோம்.



பிரம்மா :

முதலில் பிரம்மா என்பவரைப்பற்றி பார்ப்போம். புராணங்களில் பிரம்மாவினுடைய யோக்கியதையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தால்; முதலில் இவர் ஒரு பெரும் புளுகர் என்பதும், பொய்சாட்சி ஏற்படுத்துபவர் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும் யார் பெரியவன் என்னும் விஷயமாய்ச் சண்டையிட்டுக் கொண்டார்களாம். அச்சமயத்தில் சிவன் இவ்விருவருக்கும் மத்தியில் ஒரு மலையுருவெடுத்து நின்று என் அடிமுடியைக் காண்பவரே பெரியவர் என்று சொல்ல, விஷ்ணு பன்றியாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் உருவெடுத்துக் கொண்டு முறையே அடியையும், முடியையும் காணச் சென்றார்களாம். ஆனால், விஷ்ணு அடியைக் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டார். பிரம்மா முடியைக் காணமுடியாமல் தவிக்கும் போது ஒரு தாம்பூ சிவன் முடியிலிருந்து விழுந்ததாம். பிரம்மாதான் முடியைக் கண்டதாகப் பொய் சாட்சி சொல்லும்படி அத்தாழம்பூவிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கீழே வந்து தாம் முடியைக் கண்டுவிட்டதாகவும் அதற்குச் சாட்சியாகத் தாழம்பூவைக் கொண்டு வந்ததாகவும் சொன்னார். சிவன் இந்தப் பொய்யையறிந்து பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போகக்கடவது என்று சாபம் கொடுத்தாராம். இந்தப் புராணக்கதையினால் பிரம்மாவினுடைய யோக்கியதை வெளியாகியது.

இனி பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போனதன் காரணம் வேறு ஒரு விதமாகவும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், பிருகு என்னும் ஒரு ரிஷி இருந்தாராம். அவருக்கு புலொமை என்னும் ஒரு மனைவி இருந்தாளாம். மும்மூர்த்திகளுக்கே பெண்டாட்டிகள் இருக்கும் போது ரிஷிகளுக்கும் பெண்டாட்டியில்லாமல் இருக்குமா? இவர் தமது மனைவியோடு வாழுங்காலத்தில் ஒருநாள் மும்மூர்த்திகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சோதிக்க வேண்டுமென்னும் ஆசை இவருக்கு உண்டாயிற்றாம். உடனே இவர் பிரம்மலோகம் சென்று பிரம்மா இருக்கும் மாளிகையில் புகுந்தாராம். அச்சமயத்தில் பிரம்மா தன் மனைவியோடு சுகித்துக் கொண்டிருந்தாராம். அதையறிந்த பிருகு உனக்குக் கோயில் இல்லாற் போகக்கடவது என்று சபித்தாராம். ஆகையால், பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போய்விட்டதாம்.

இந்த இரண்டு கதைகளில் இரண்டு காரணம் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இதிலிருந்து என்ன ஏற்படுகிறது என்றால் பிரம்மாவுக்கும் சிற்றின்ப சுகத்தில் மிகுந்த விருப்பமுண்டாயிருந்தது என்று ஏற்படுகிறது. இது கடவுள் தன்மைக்கு அழகா? என்று யோசித்துப் பாருங்கள். சிலர் பிரம்மா தன் மனைவியிடத்தில் தானே சுகித்துக் கொண்டிருந்தார்? இது உலக வழக்கந்தானே? தன் மனைவியிடத்தில் கணவன் சேர்ந்து சுகிப்பது தவறல்லவே என்று சொல்லக்கூடும். இதை நாமும் ஒப்புக்கொள்கிறோம் என்றாலும், இவர் இன்னொரு வேலை செய்திருக்கிறார். அதையும் சொல்லி விடுகிறேன்.

பிரம்மா ஒரு காலத்தில் பத்மை என்னும் ஒரு பெண்ணை உண்டாக்கினாராம். பிறகு அவள் வெகு அழகாயிருப்பதைக் கண்டு தன் மகள் என்றும் யோசியாமல் அவளைக்கூடி கற்பழித்துவிட்டாராம். இந்தச் சரித்திரமும் புராணங்களில் காணப்படுகிறது. இன்னும் சுப்பிரமணியரால் இவர் சிறையிடப்பட்டது முதலியவைகளைப் பற்றி சொல்லப்புகின் விரியும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். இதனால் மகளை மணந்து கொண்டவர் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

விஷ்ணு :

இனி விஷ்ணு என்பவருடைய யோக்கியதையைப் பற்றிக் கவனிப்போம். இவர் எவ்வளவு அயோக்கியத்தனமான காரியங்களையும் முன்பின் பாராமல் செய்து விடுவார். இவர் செய்துள்ள காரியங்களில் அறிவாளிகள் ஒப்புக்கொள்ளக்கூடிய நன்மைகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். காமம், வஞ்சனை, பொறாமை, தந்திரம், அநியாயம் முதலிய குணங்கள் இவரிடத்தில் பதிந்து கிடக்கின்றன. அப்படியிருந்தும் இவருக்குக் கோயில், குளங்களும், தேர் திருவிழாக்களும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இவர் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைக் கொன்று யாகம் செய்து வந்த முனிவர்களையும், ரிஷிகளையும் காப்பாற்றுவதற்காகவும் யாகம் செய்யக்கூடாது என்று சொல்லித் தடுத்துவந்த அரக்கர்களை ஒழிப்பதற்காகவும் வேண்டி இராமாவதாராம் செய்தார் என்றால் இவருடைய குணம் எப்படிப்பட்டதென்பதை நன்குணரலாம். இவர் செய்த அவதாரங்களுக்கும், கற்பழித்தல், வஞ்சித்தல், சாபம் பெறுதல், சாபவிமோசனம் பெறுதல் முதலியவைகளுக்கும் கணக்கு வழக்கு இல்லை. இவற்றையெல்லாம் சொல்லப்போனால் இப்புத்தகம் இடம் கொள்ளாது. ஆகையால் இவரைப்பற்றி ஒரு விஷயத்தை மாத்திரம் எழுதிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

சலந்தரன் என்னும் அரசன் இருந்தானாம். அவன் காலநேமி என்பவன் மகளாகிய கற்பிற் சிறந்த பிருந்தை என்பவளை மணந்து அரசாட்சி செய்து கொண்டிருக்கையில் தேவர்களையெல்லாம் வெற்றி கொண்டு கைலாயஞ்சென்று சிவனை எதிர்த்துச் சண்டை செய்தான். சிவன் கிழவடிவம் கொண்டு நிலத்தை வட்டமாகக் கீறி இதை நீ தூக்க முடியுமா? என்று கேட்டராம். சுலந்தரன் இதுதானா பிரமாதம் என்று சொல்லி அதைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொள்ள அது வெடித்து அவனைக் கொன்று விட்டதாம். அவனுடைய சேனைகளும், சிவனுடைய நெற்றிக் கண்ணால் எரிந்து போய் விட்டனவாம். சுலந்தராசுரன் சிவனோடு சண்டை செய்து கொண்டிருந்த நாளில் விஷ்ணு என்பவர் சலந்தரன் மனைவி பிருந்தையின் மேல் காமங்கொண்டு அவள் பதிவிரதை என்பதை மறந்து அவளைச் சேருவதற்காக ஒரு சூது செய்தார்.

அதாவது, சலந்திரனைப் போல வடிவம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பக்தர்களை அசுரச் சேனைகள் போல வடிவம் எடுத்துக் கொள்ளச் செய்து சலந்தராசுரன் சண்டையிலிருந்து திரும்பிவருவது போல பிருந்தையிடம் சென்றாராம். இச்சூது அறியாத பிருந்தை தன் கணவன் என்றே நினைத்துக் கொண்டாளாம். பிறகு விஷ்ணு தினந்தோறும் அவளைக் கூடி இன்பந்துய்த்தாராம்! அந்தோ! அயோக்கியப் பாதகர்கள்கூட இக்காரியஞ்செய்ய அஞ்சுவார்கள் என்றால் கடவுள் என்று கொண்டாடப்படும் மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே ஒரு கற்பரசியை வஞ்சகமாகக் கற்பழித்தாரென்றால் இதைவிடக் கொடுமை என்னத்தான் வேண்டும். இவரையும் கடவுள் என்று கும்பிடுகிறார்களே! இருக்கட்டும், கதையைத் தொடர்வோம்.

கடைசியில், பிருந்தை இவர் இன்னார் என்பதைத் தெரிந்து கொண்டாளாம். அவள் கற்பரசியாகையால் அகலிகை, அருந்ததி முதலியவர்களைப்போல் உயிர் வாழ்ந்திருக்கச் சகியாமல், நெருப்பை உண்டாக்கி அதில் விழுந்து இறந்துவிட்டாளாம். அச்சமயத்தில் அவள் விஷ்ணுவுக்கு ஒரு சாபம் கொடுக்கிறாள். அதாவது விஷ்ணுவின் மனைவி தன்னை (பிருந்தை)ப் போலவே மாற்றான் கையில் அகப்பட்டுக் கற்பழியட்டும் என்று சாபம் கொடுத்தாளாம். ஆனால், காமப்பித்துக் கொண்ட விஷ்ணு பிருந்ததை இறந்துவிட்ட பிறகும், அவள் மேல் மோகங்கொண்டு அவள் இறந்த சாம்பலில் துளசி புரண்டு புரண்டு அழுதாராம். எவ்வளவு மானக்கேடு பாருங்கள்! பிறகு அந்தச் சாம்பலில் துளசி உற்பத்தியாயிற்றாம். அவர் பிருந்தை மேலுள்ள காதலால் அத்துளசியை மார்பில் அணிந்து கொண்டாராம்.

இக்காலத்திலும் விஷ்ணு கோயில்களில் துளசிதான் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதையும், அங்கு செல்லும் பக்தர்களுக்குத் துளசி கொடுக்கப்படுவதையும் எல்லோரும் அறிவார்கள். பிருத்தையினிடத்தில் விஷ்ணு நடந்து கொண்ட விதத்திலிருந்து அவர் எத்தகைய அயோக்கியத்தன முள்ளவர்கள் என்பது நன்கு விளங்கும். வேலியே பயிரை மேய்வது போல பிருந்தையின் கற்பைக் காக்கவேண்டியது கடவுள் என்று சொல்லப்படும் இவரது கடமையாயிருக்க இவரா கற்புடைய பிருந்தையை ஏமாற்றி வஞ்சகமாகக் கழிபழித்தாரென்றால் இவர் அயோக்கியத்தனம் உள்ளவர் என்பது சொல்லாமலேயமையும் ஆனால், இத்தகைய கடவுளின் சீடர்கள் எனப்படுவோர் இதற்கு ஒரு நொண்டிச் சமாதானம் சொல்லுகிறார்கள். அதென்னவென்றால் பிருந்தை கற்பழிவாளானால் சலந்தராசுரன் செத்துப்போவானென்றும், அவள் கற்புடையவளாயிருக்கிற வரையில் சலந்தரனுக்குச் சாவு வரக்கூடாதென்று வரம்பெற்றிருந்தானென்றும் ஆகையால், அவன் சாகும்பொருட்டு விஷ்ணு பிருந்தையைக் கற்பழித்தாரென்றும் சொல்லுகிறார்கள்.

இவர்களின் சமாதானங்களும் அகச்சான்று புறச்சான்றுகளும் வெகு விநோதமாகவிருக்கின்றன. சலந்தரன் இறப்பான் வேண்டி பிருந்தயை விஷ்ணு கற்பழித்தார் என்பது பெரும் பொய். அவர் காமவிகாரங்கொண்டு வேண்டுமென்றே பிருந்தையைக் கற்பழித்தார். இதற்குச் சான்று என்னவென்றால் பிருந்தை நெருப்பில் விழுந்து எரிந்து சாம்பலாய்விட்ட பிறகுங்கூட விஷ்ணு அவளையே நினைத்து வருந்தி அச்சாம்பலில் புரண்டு புரண்டு அழுதார்! அம்மட்டோ? அந்தச் சாம்லில் துளசி முளைக்க அதையும் பிருந்தையின் மேலுள்ள அன்பினால் விஷ்ணு அணிந்து கொண்டார். இவர் கற்பழிக்க வேண்டுமென்று மாத்திரம் கருதியிருந்தால் இவ்விதம் செய்திருப்பாரா? நிற்க,

பிருந்தையின் சாபம் விஷ்ணுவை விடவில்லை. அச்சாபத்தின் பலனாகத்தான் விஷ்ணு இராமனாகவும், லட்சுமி சீதையாகவும் பிறந்து இராவணனால் சீதை தூக்கிக் கொண்டு போகப்பட்டாளெனறு சில புராணங்கள் சொல்லுகின்றன. இச்சமயத்தில் வாசகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். அதாவது சீதை இராவணனால் கட்டாயம் கற்பழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே. எப்படியென்றால் பிருந்தை நெருப்பில் விழும்போது விஷ்ணுவுக்குக் கொடுத்த சாபம் என்னவென்றால், உன் மனைவியும் என் கதியடையட்டும் என்பதே. அதாவது பிருந்தை விஷ்ணுவினால் கற்பழிக்கப்பட்டது போல உன் மனைவியும் உன்னைப் பிரிந்து கற்பழிக்கப்படட்டும் என்பதேயாகும்.

அவ்வாறேதான் இராமாவதாரத்தில் விஷ்ணு சீதையைப் பிரிந்து வருந்தினார் என்பதோடு மாத்திரமல்லாமல், வால்மீகி சீதை இராவணனால் கற்பழிக்கப்பட்ட விஷயத்தை நேர்முகமாகச் சொல்லாவிட்டாலும் ஊகித்தறியும்படியான வித்ததில் மறை முகமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் இராமாயணம் ஆராய்ச்சி என்னும் நூலைப் படித்தால் தெளிவாக விளங்கும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து விஷ்ணு எனப்படும் கடவுள் செய்துள்ள எண்ணிரந்த அயோக்கியத்தனங்களில் நூற்றில் ஒரு பாகம் மட்டும் விளக்கப்பட்டது. அதாவது விஷ்ணு கற்புள்ள ஒரு மங்கையை வேண்டுமென்றே கற்பழித்து அதன் பலனாகச் சாபத்தையும் அடைந்து ஒரு பாவமும் அறியாத தனது மனைவி லட்சுமியும் பழியடைவதற்குக் காரணமாயிருந்தார் என்பதே.

சிவன் :

இனி, சிவன் என்னும் கடவுளைப்பற்றி ஆராய்வோம்.

இவரும் அயோக்கியத்தனத்தில் விஷ்ணுவுக்குக் குறைந்தவர் அல்லர். இவர் தமது பக்தர்களைச் சோதிக்க விரும்பினால் பண்டார வேஷம் போட்டுக் கொண்டு தன் பக்தனிடம் சென்று பக்தா உன் மனைவியை எனக்குக் கொடு என்று கேட்கும் அத்தகைய பெரியவர். எத்தகைய பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாயிருந்தாலும் சிவ சிவா என்று தன் பேரைச் சொல்லிவிட்டால் அவர்களுக்கு உடனே மோட்சம் அளிக்கும் கருணாநீதி. இப் பெரியாருடைய யோக்கியதைகளை முற்றிலும் எழுத இப்புத்தகம் இடம் கொள்ளலாது. ஆகையால், இவர் யோக்கியதையைத் தெரிவிக்கும் பொருட்டு ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கு எழுதுவோம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது அமிர்தம் யாருக்கு உரியது என்பதைப்பற்றி விவாதம் நிகழ்ந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கடைந்ததனால் கிடைத்த அமிர்தத்தை இரு பகுதியாரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது நியாயமாக இருக்க விஷ்ணு அவ்விதம் பங்கிட்டுக் கொள்ளாமல் அயோக்கியத்தனமாக ஒரு காரியம் செய்தார். அது என்னவென்றால் மிக்க அழகு வாய்ந்த ஒரு கன்னிகை போல உருவெடுத்துக் கொண்டு அசுரரிடம் வந்து உங்களுக்கு அமிர்தம் வேண்டுமா? நான் வேண்டுமா? என்று கேட்டாராம். அசுரர்கள் இப்பெண்ணின் அழகைக் கண்டு ஆசைக்கொண்டு நீதான் வேண்டுமென்று சொல்ல அந்தப் பெண் அவர்களை அழைத்துக் கொண்டு ஓரிடஞ் சென்றாள். அவ்விடத்தில் அப்பெண்ணை யார் அடைவது என்னும் விஷயத்தில் அசுரர்களுக்குள் சண்டையுண்டாகி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்து விட்டார்கள்.

பிறகு விஷ்ணுவாகிய அப்பெண்ணை சிவன் (காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றமும் இல்லாத எம்பெருமான் பார்த்து கட்டிலடங்காக் காமங்கொண்டார். இச்சிவபெருமான் தமது ஞானக் கண்ணைத் திறந்து பார்த்து அப்பெண் விஷ்ணுவின் மாறுவேடம் என்பதை அறிந்தோ, அறியாமலோ அப்பெண்ணிடம் சென்று எல்லா ஜீவகோடிகளும் உய்யும் பொருட்டு அப்பெண்ணைக் கூடிச் சையோகஞ் செய்தாராம்! இது எவ்வளவு யோக்கியமான பெருந்தன்மையான புண்ணியமான செய்கை என்பதைப் பாருங்கள். சிவன் சையோகம் செய்தார்! யாரை பெண் உருவந்தாங்கிய விஷ்ணுவை! சிவனும், விஷ்ணுவும் சையோகஞ் செய்தால் பலனில்லாமற் போகுமா? அவர்களை புத் என்னும் நரகத்திலிருந்து காப்பாற்ற ஒரு புத்திரன் வேண்டாமா? ஆகவே, ஒரு புத்திரன் தோன்றினான். அவன் பெயர் அரிகரபுத்திரன் அரிக்கும், அரணுக்கும் பிறந்தவன் என்பது பொருள். இப்புத்திரனுக்கு அய்யனார் என்றும் ஒரு பெயர் உளதாம்! இப்புத்திரனைப்பற்றி நமக்குக் கவலையில்லை. நிற்க,

வாசகர்களே! மும்மூர்த்திகளின் யோக்கியதைகள் முழுவதும் சொல்ல முடியவில்லை. ஆயிரம் நாவுபடைத்த ஆதிசேசடனாலும் சொல்ல முடியாதென்றால் சாட்சாத் எம்பெருமான்களாகிய மும்மூர்த்திகளின் யோக்கியதைகளை ஒரு நாவு படைத்துள்ள நானா சொல்லக்கூடும்? ஆயிரத்தில் ஒரு பங்கு மாத்திரந்தான் சொன்னேன். ஆனால் இம் மும்மூர்த்திகள் சம்பந்தப்படாத புராணங்கள் கிடையாது. ஆகையால், இவர்கள் தன்மைகளையெல்லாம் எழுதப்புகின் மிகமிக விரியுமாதலின் கடைசியாக வாசகர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்.

மும்மூர்த்திகளின் யோக்கியதையை ஒரு சிறிதாவது தெரிந்து கொண்ட பிறகு புராணங்களும், இதிகாசங்களும் நமது நாட்டில் இருக்க வேண்டுமா? அவைகளினால் மோட்சம் கிடைக்குமா? அவைகளைப் படிப்பதினால் நல்ல புத்தி ஏற்படுமா? என்பதையும் இத்தகைய புராணங்களைக் கொளுத்த வேண்டாமா? அல்லது போற்றி துதிக்க வேண்டாமா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய அயோக்கியத்தனமான தேவர்கள் வேறு மதத்திலாவது உண்டா? என்பதையும் கவனியுங்கள்.

(பெரியார் எழுதிய ‘புராணம்’ நூலிலிருந்து)

Friday, April 9, 2010

பெரியார் பேசிய திராவிடத்தின் உள்ளடக்கம் தமிழர்களின் விடுதலைதான்






இந்த தமிழ்ச் சமுதாயத்தில், தமிழ்நாட்டில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களில் பெரியார் தான் முதன்மையானவர். அப்படிப்பட்ட தலைவரை இவரது சரியான உருவம் எது, இவருடைய சரியான சிந்தனைகள் எவை என்று விளக்குவதற்கு அவருடைய கருத்துகள் முழுமையாக தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆன நிலையிலும், தோழர் ஆனைமுத்து அவர்கள் வெளியிட்ட பெரியார் சிந்தனைகளைத் தவிர, அதற்கு ஆதாரமாக பெரியாரின் கருத்துகள் இவைதான் என்று சொல்லுவதற்கு வேறு தொகுப்புகள் இல்லை.

அது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மட்டும் தான். முழுமையான படைப்புகள் அல்ல. முழுமையான அவருடைய சிந்தனைகள் தமிழ் சமுதாயத்திற்குக் கிடைக்கவில்லை. பெரியார் ஒவ்வொரு கருத்தைப் பற்றியும் என்ன சொல்லி இருக்கிறார், என்ன நிலையைக் கொண்டிருந்தார், ஏன் அந்த நிலையைக் கொண்டிருந்தார் என்று விளக்குவதற்கு வாசகர்கள் தாங்களாக படித்துவிளங்கிக் கொள்வதற்கு அவர் நூல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அது ஒரு பெரிய சங்கடமான சூழல் தான். திராவிட ர் கழக சார்பில் பெரியாரின் களஞ்சியங்கள் ஆறு தொகுதிகள் வெளிவந்தன. 1991 ஆம் ஆண்டோடு அது நின்று போய்விட்டது. 2005ல் தான் 7வது தொகுதி வெளிவந்துள்ளது. அது தீண்டாமையைப் பற்றி, சாதியைப் பற்றி பெரியார் கொண்டிருந்த கருத்துகளை விரிவாக விளக்குகிறது.

நாங்கள், தந்தை பெரியார் திராவிடர் கழக சிறு இயக்கமாக இருந்தாலும் சென்ற ஆண்டு பெரியார் ஆண்டுவாரியாக பேசியதையும், எழுதியதையும் தொகுத்து தரவேண்டும் என்று எண்ணத்தில் அடிப்படையில் குடிஅரசு 1925 பெரியாரின் எழுத்தும் பேச்சும் என்ற தொகுப்பை வெளியிட்டோம். 1926ம், 27ம் இப்பொழுது வெளியிட தயாராக இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு கிடைக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் பெரியார் என்ன சிந்தனைகள் கொண்டிருந்தார் என்று அறிவதற்கு தேடித் தேடி ஆய்ந்து நமக்கு கொடுக்கிற அறிஞர்கள் தான் பல செய்திகளை நமக்கு விளக்கிச்சொல்ல முடிந்தது. காரணம் நமக்கு செய்திகளை கொடுக்க வேண்டியவை இரண்டு தான். ஒன்று பாடநூல். மற்றொன்று செய்தித்தாள்கள். பாடநூல்கள் எதையும் முழுமையாக கொடுக்காது.

பெரியார் என்றால் யார்? கதர் மூட்டையை தோளில் தூக்கி விற்றார். 500 தென்னை மரங்களை வெட்டினார் இவர் தான் பெரியார். பாரதிதாசன் யார்? அழகின் சிரிப்பு எழுதினார். குடும்ப விளக்கு எழுதினார். அவர் தான் பாரதிதாசன். இப்படித்தான் பாடநூல்கள் சொல்லின. முழுமையான செய்தியை சொல்வதில்லை. நான் அடிக்கடி சொல்லுவேன், புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று இவ்வளவு காலமும் பாடப்புத்தகம் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவராவது புத்தர் அரச மரத்தடியிலிருந்து அறிவுத் தெளிவு பெற்றார் என்று எழுதியதில்லை. போதி மரம் என்றால் ஏதோ மரமென்று நாங்கள் எல்லாம் கருதிக் கொண்டிருந்தோம். ஒரு பாடப் புத்தகம் கூட இதுவரை எழுதவில்லை.

அப்புறம் பத்திரிகைகள் அவைதம் நமக்கு உரிய செய்திகளைக் கொடுப்பதில்லை. எது பரபரப்பாக இருக்கிறதோ அதை மட்டும் கொடுக்கின்றன. இந்தக் கடமையை யார் ஆற்றுகிறார்கள் என்றால் ஆய்வாளர்கள் தேடிச் சென்று பல செய்திகளை விளங்க வைக்கிறார்கள. அதே பெரியாரைப் பற்றி எழுப் பப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு எஸ்.வி.இராசதுரையும், வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்ற நூல், தோழர் எஸ்.வி.இராசதுரை எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நூல் நிறைய விளக்கங்களை கொடுத்தது ஒவ்வொரு நிலையிலும் பெரியார் நிலைப்பாடுகளை எல்லாம் விளக்கி, அவர் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்; அதில் என்ன நியாயங்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர்.

பெரியார் பொதுவுடைமைப் பிரச்சாரத்தை கைவிட்டு ஓடிவிட்டார் என்று சொன்னபோது கூட அவர்கள் சொன்னார்கள். ஆம் 1935 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் ஒரு அறிக்கை விடுகிறார். மார்ச் 31ஆம் நாள் ஒரு அறிக்கை விடுகிறார். இரண்டிலும் சொல்கிறார். பொதுவுடைமைப் பிரச்சாரத்தை நாம் கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார் உண்மைதான். ஆனால் 28 நாட்கள் கழித்து, அதே 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் தோழர்களே மே தினம் கொண்டாடுங்கள்! இந்த சாக்கிலாவது பொதுவுடைமைக் கருத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று அறிக்கை விடுகிறார். 28 நாட்கள் கைவிட்டிருந்தார். ஆனால் அதையே அவர் மீது பெரும் குற்றச் சாட்டாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. அவர் நீதிக் கட்சியை ஆதரித்தது ஏன்? இரண்டாம் உலகப் போரின் போது அவர் மேற்கொண்ட நிலைகளுக்கான காரணம் - இவை எல்லாம் விமர்சிக்கப்பட்டன. அதற்கு அவர்கள் நூல்களிலே விளக்கம் சொன்னார்கள்.

பெரியாருடைய தமிழன், திராவிடன் என்பவை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பெரியார் தமிழ்த் தேசியத்திற்கு எதிரி என்றுதான் பெரும்பாலும் பேசப்பட்டு வந்தது. பெரியார் திராவிடன் என்று சொன்ன காரணத்தால், திராவிடர் கழகம் என்று பெயர் வைத்த காரணத்தால், அவர் தமிழினத்திற்கு எதிரி; மற்ற திராவிட இனத்தைச் சார்ந்த மற்ற தேசீய இனங்கள் நம்மைச் சுரண்டுவதற்கும், அழுத்துவதற்கும் நாம் மானங்கெட்டு இருப்பதற்கும் பெரியார் சொன்ன திராவிடம் தான் காரணமாக இருந்தது என்றெல்லாம் சொன்னார்கள். இந்த நிலைக்கு விளக்கம் வேண்டும் என்று வருகிறபோது தான் அருமைத் தோழர் சுப.வீ.அவர்கள் இந்த நூலைக் கொண்டு வந்து அதில் பலவற்றிக்கு விளக்கம் கொடுத்துள்ளார். ஒவ்வொருவரும் இந்த தமிழ் தேசியத்திற்குள் யார் யாரை உள்ளடக்கி பேசினார்கள். அவர்கள் வெளியே நிறுத்தியது யாரை? என்பதை சிறப்பாக விளக்கிதள்ளார்.

மறைமலை அடிகள் பேசிய சமய தேசியம், (தமிழ் தேசியம்) அவரைத் தவிர, அவர் சாதியைத் தவிர மற்றெல்லோரையும் வெளியே நிறுத்தியது. ம.பொ.சி. பேசினார் தெலுங்கர்கள், கன்னடர்கள் என்று. தமிழர்களைத் தவிர மற்றவரை வெளியே நிறுத்தினார். யாரை உள்ளடக்கினார்? பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டார். அவர் பேசிய தமிழ்த் தேசியத்தில் தமிழர்களிடம் தமிழ் மொழி இருக்க வேண்டும். ஆனால் இந்து என்ற அடிப்படையில் வடமொழியும் இருக்கவேண்டும். வழிபாடு வடமொழியால் செய்வதுதான் பயனுள்ளது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அதைத் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார். ஆனாலும் ம.பொ.சி. அவர்கள் தான் சுயநிர்ணய உரிமை என்கிற சொல்லை, அந்தக் கருத்தை, சொல்லாடலைக் கொண்டு வந்தவர் என்ற அடிப்படையில் அவரைப் பாராட்டத்தான் வேண்டும் என்று இந்த நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் நான் மாறுபடுகிறேன். சுயநிர்ணய உரிமை என்பதை அவர் 1946ஆம் ஆண்டுதான், தமிழரசு கழகத்தை உண்டாக்கி, அதற்கு பிறகு தான் கொள்கையாகச் சொல்கிறார். ஆனால் பெரியார் 1940 ஆம் ஆண்டிலிருந்தே சுய நிர்ணய உரிமை என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார்.

1940ல் குடிஅரசில் தலையங்கம் எழுதுகிறார் 1943ல் ஒரு தலையங்கம் எழுதுகிறார். இரண்டிலும் பெரியார் சொல்கிறார்.

“இன்று இந்தியா தான் தனது நாட்டின் எதிர்காலத் திட்டத்தை வகுக்க, நிர்ணயிக்க உரிமை கொண்டதென கூறுகையில், தமிழ்நாட்டின், திராவிட நாட்டின் எதிர்காலத்திட்டத்தை நிலையை வகுக்க, நிர்ணயிக்க தமிழ்நாட்டுக்குத்தான் உண்டென்று நான் விளக்கிக் கொண்டு வருகிறேன். உண்மையிலேயே தமிழ் மகன் சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருந்தால் தன்னைப் பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தி தன்னைச் தாசி மகன் சூத்திரன் என்று அழைத்துக் கொள்ள வெட்கப்படாமலிருப்பானா? என்று கேட்கிறோம். இந்த இழிதன்மை, மானங் கெட்ட வாழ்வு ஒழிய வேண்டுமானால் தமிழ னுக்குச் சுயநிர்ணய உரிமையிருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கும்”.

என்று அவர் 11.2.1940ல் குடிஅரசில் எழுதுகிறார். அதே போல் இன்னொன்று; சாவர்க்கருக்கு 60-வது பிறந்த நாள் வருகிறது. அதைக் கண்டித்து பெரியார் ஒரு அறிக்கை விடுகிறார். சாவார்க்கர் காந்தியைக் கொல்வதற்கு முன்பாகவே, அதாவது 1923ல் இந்துத்துவா என்ற தத்துவத்தை இந்த மண்ணில் விதைத்த சாவர்க்கர்; அவரைப் பற்றி அதைக் கண்டித்து எழுதுகிறபோது, அவர் பேசிய இந்து தேசியத்தைக் கண்டித்து எழுதுகிறபோது ‘சுய நிர்ணய உரிமை கோருவது ஆக்கிரமிப்பா?’ என்ற தலைப்பில் 8.6.43ல் விடுதலையில் ஒரு அறிக்கை விடுகிறார். அதற்கு முன்பும் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார்.

“தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும் பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.”

இரண்டு கட்டுக்களையும் உடைப்பதுதான் தமிழனை விடுதலை பெற வைக்கும் என்ற கருத்தினை குடிஅரசு 17.9.1939ல் அவர் சொல்லுகிறார். 1930 ஆம் ஆண்டு மே மாதம் சேலத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் அவர் பேசுகிறபோது இந்தியா ஒரு நாடாயிருக்கிறதா? இந்தியா - சாதிகள் காட்சி சாலையாக, மதக் கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக இருக்கிறதே தவிர ஒரு நாடு அல்ல என்று பேசியிருக்கிறார். 1937ல் தமிழ்நாடு இந்தியாவோடு சேர்ந்தது அல்ல என்று சொல்கிறார். 1938ல் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கிறார். அதில் கூட சுப.வீ. அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பெரியார் நான்கு மாநிலத்தையும் ஒன்றாக இணைக்கிற தேசியத்தை தான் கொண்டிருந்தார் என்று எழுதியிருக்கிறார்.

அது சரியான கருத்து அல்ல. 1938ல் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில், செப்11-ல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை வைக்கிறார். ஆனால், அப்போது சென்னை ராஜதானியத்திலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களும் ஆகிய எங்கள் நிலை என்னாவது? என்று கேட்டபோது யார் யார் கேட்கின்றார்கள் என்றால், அண்டைய மாநிலத்தில் வாழுகிற எல்லா மலையாளிகளும், எல்லா தெலுங்கர்களும், எல்லா கன்னடியர்களும் அல்ல - சென்னை ராஜதானியிலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களுமாகிய எங்கள் நிலை என்னாவது என்று சொன்னபோது நான் திராவிட நாடு திராவிடருக்கே என்று முழக்கத்தை மாற்றிக் கொண்டேன் என்று சொல்கிறார். ஆனால் இப்படி மாற்றிக் கொண்ட காலத்திலெல்லாம் கூட அவர் திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை 1939லிருந்து 55 வரையிலும் சொல்லுகிறார்.

ஆனால் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்னால் இன்னும் ஏன் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கிறார். அதுவும் சொல்கிறார் இந்த தெலுங்கனுக்கும், கன்னடனுக்கும் மலையாளிக்கும், ஆரிய எதிர்ப்புணர்வோ, வடநாட்டு எதிர்ப்புணர்வோ சிறிதும் இல்லை. அவர்கள் எல்லாம் நல்ல வேளையாகத் ஒழிந்து விட்டார்கள். எனவே மீண்டும் முழக்கமிடுவோம் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லுகிறார். அதற்கு முன்பு அவர் சொல்லுகிறபோது கூட ஒவ்வொரு இடத்திலும் அவர் தமிழ்நாடு, தமிழ்நாடு என்று தான் சொல்லுகிறார். தன்னுடைய எல்லா அறிக்கைகளிலும் - அதுவும் திராவிட நாடு என்று பேசிக் கொண்டிருகிற காலத்தில் கூட, சொல்லுகிறேன், அவர் பேசிய திராவிடநாடு என்பதன் உள்ளடக்கம் தமிழ் நாடாகவே இருந்தது.

10.5.1941 ல் விடுதலையில் ஒரு அறிக்கை விடுகிறார். இதுவரை எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் ஒன்றும் முடியாததால்தான் இன்று, தமிழ்நாடு தமிழருக்கே (அடைப்புக் குறிக்குள் திராவிட நாடு திராவிடருக்கே) ஆக வேண்டும் என்கின்ற கிளர்ச்சி செய்கின்றோம். திராவிடநாடு என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டுத் தான் எழுதுகிறார். தமிழ்நாடு தமிழருக்கானால் 10 வருஷத்தில் தற்குறித்தன்மை பறந்து போகும். 3 வருஷத்தில் பிறவி ஜாதி முறை ஒழிந்து போகும்.

5 வருஷத்தில் ஆரிய மூடநம்பிக்கை அறவே ஒழிந்து போகும். ஒரு வருஷத்தில் வெளிநாட்டு ஆரியர்கள் சுரண்டல்கள் நின்னு போகும். என்று வரிசையாக சொல்லிக் கொண்டு வந்து - அப்பொழுது இரண்டாவது உலகப் போர் நடக்கிறது -சொல்லுகிறார், ஆதலால் இந்த தத்தம் முடிந்தவுடன் நமது கிளர்ச்சி தமிழ்நாடு தமிழருக்கு ஆகச் செய்வதுதான் என்று சொல்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் திராவிட நாடு திராவிடருக்கே என்று சொல்லிக் கொண்டும் முழக்கம் வைத்துக் கொண்டுமிருக்கிறார். ஆனால் அவர் சொல்வது 1941 இல் தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆவதற்காகத் தான் முழக்கம் வைக்க போகிறேன் என்று சொல்கிறார்.

“இந்தியா நேஷனாக வேண்டும் என்பதும் இந்துமதத்தை ஒழிப்பது என்பது போல்தான் முடியாத காரியமாகும். நாம் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் உள்ள எல்லையை ஒரு நேஷனாக ஆக்கிக் கொள்ளலாம். நம் தாய்மொழி தமிழ், தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும்? ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.” என்று 28.6.1943 அன்று விடுதலை தலையங்கத்தில் எழுதுகிறார்.

இந்த காலகட்டத்திலெல்லாம் பெரியார் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவர் அறிக்கையிலும், பேசுவதிலும் எல்லாம் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசி வருகிறார். ஆனாலும் கூட அவர் மீது குற்றச்சாட்டுகள் சொல்வதுண்டு. ஏன் பெரியார் தமிழன் என்ற சொல்லை கையாளாமல் திராவிடன் என்ற சொல்லை கையாள்கிறார் என்றால் “தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்” என்று சொல்கிறார்.

மேலும், “சூத்திரன் என்பவர்களுக்குத் திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ள வசதியிருக்கக்கூடாது. அயலார் புகுந்துகொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும். இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்.

“ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ் (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் இன்று அது மொழிப் பெயராக மாறி விட்டிருப்பதால், அம்மொழி பேசும் ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள். அதோடு ஆரியப் பண்பை நம் மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்.” எனவேதான் அந்த ‘திராவிடன்’ என்ற சொல்லைக் கையாண்டேன் என்று சொல்லிவிட்டு, சொல்கிறார்.

“தமிழ் என்பதும் ‘தமிழர் கழகம்’ என்பதும் மொழிப் போராட்டத்திற்குத் தான் பயன்படுமேயொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய முழுப்போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாய பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடாது என்பதால்தான் அந்த ‘திராவிடன்’ என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன்” என்கிறார்.

மேலும் 1955ல் சொல்கிறார் சென்னை மாநிலம் என்று பிரிக்கிறான். மொழிவாரி மாநிலமாக பிரிக்கிறான். தமிழ்நாடு என்று பெயர் வைக்காமல் சென்னை மாநிலம் என்று பெயர் வைப்பான் போல் தெரிகிறது. மாநிலங்கள் சீரமைப்பு குழுவின் அறிக்கை வருவதற்கு முன் பெரியார் எழுதுகிறார்.

“அதைவிட கொடுமையான செய்தி இருக்க முடியாது. என்னுடைய நாட்டை தனியாகப் பிரித்து, மாநிலமாக பிரிக்கிறாய். பிரித்து அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் சென்னை ராஜதானி என்ற பெயர் வைப்பதாக அறிகிறேன் என்று சொல்லி அதைக் கண்டித்து இதையெல்லாம் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்” என்பதை சொல்லி விட்டு பிறகும் சொல்கிறார்.

“இவ்வளவெல்லாம் செய்த பிறகும்கூட திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்ற சொல்லியாவது தமிழகத்தைப் பிரிக்கலாம். அது வெற்றிகரமாக முடிவதற்கெல்லாமல் பார்ப்பான் வந்து நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான். இதற்காகத்தான் நான் திராவிடன் என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்துகிறேன்” என்றுசொன்னார். அதற்குப் பிறகு 1956ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை மாற்றிக் கொண்டாலும் கூட திராவிடன் என்ற சொல்லை சமுதாய விடுதலைக்கு தொடர்ந்துவிடாமல் சொல்லிக் கொண்டு வந்தார். அரசியல் விடுதலை என்று வருகிறபொழுது தமிழ், தமிழன் என்ற அடையாளத்தையும், சமுதாய விடுதலை என்று வருகிறபோது திராவிடன் என்ற அடையாளத்தையும் சொல்லி வந்திருக்கிறார்.

கடைசி வரை பெரியார் இந்த சிந்தனையோடுதான் இருந்தார். தோழர் சீமான் அவர்கள் சொல்கிறபோது சொன்னார். இறுதி நாட்களில் வலி வந்தபோதுகூட சொல்லை பிசிறில்லாமல் தொடர்நது சொன்னார். அந்த சொற்கள் என்ன தெரிதமா? அவர் பேசுகிறார் அந்த ஒலி நாடாவைக் கேட்டால் தெரியும்.

“நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உன்னுடைய உணவு வேறு என்னுடைய உணவு முறை வேறு; உன்னுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; உன்னுடைய கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் வேறு; உன்னுடைய நடப்பு வேறு” என்று சொல்கிறார்.

வலி வந்து விடுகிறது. உடனே அய்யோ, அம்மா, அப்பா என்று இரண்டு நிமிடம் முனகிவிட்டு, கொஞ்சம் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு பேசத் தொடங்குகிறார். “என் நடப்பு வேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்கிறார். நம் காலில் கல் இடித்து விட்டால்கூட பேசிக் கொண்டு வந்த செய்தி மறந்துவிடும். என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை பக்கத்திலிருப்பவரிடம் கேட்போம். பெரியாருக்கு வந்த அந்த வலிதான் அவருக்கு சாவில் கொண்டு போய் முடித்த வலி. இரண்டு நிமிடம் அந்த வலியில் துடித்த பின்னாலும் தமிழன் மேல் உள்ள அக்கறை, தமிழன் தனியாக நிலையான அரசாக வாழவேண்டும் என்று எண்ணிய அவரது சிந்தனை உன்னுடைய நடப்பு வேறு என்று சொல்லிவிட்டு வலி வந்து இரண்டு நிமிடம் கதறிவிட்டு, அதற்குப்பின்னால் சொன்னார்.

என் நடப்புவேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். வெளியே போ என்று அந்த சிந்தனையோடுதான் இறுதிவரை இருந்தார். அவரைப் பொறுத்தவரை மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது மூன்றையும் ஒழிக்க பாடுபடும் இந்த சுயமரியாதை இயக்கம். அந்த மூன்றில் அவர் தொடர்ந்து எச்சரிக்கையாக, கவனமாக இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு விடுதலை என்று பேசுகிறபோது கூட அதை சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் பார்த்தார்.

பெரியார் கடவுள் மறுப்பைக்கூட, சாதி ஒழிப்புக்கு தடையாக இருக்கிறது என்று உணர்ந்து, தெளிந்து பிறகு கடவுள் மறுப்புச் சொல்கிறார். அவர் இலட்சியத்தை, இலக்கை அடைய கடவுள் தடையாக இருக்கிறார் என்பதால்தான் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் மறுப்பே இவர் இலட்சியமல்ல. அவர் இலக்கை அடைய ஒரு வழியாக எடுத்துக் கொண்டார். அதை ஒரு கருவியாக எடுத்தார் கையில். அதே போலத் தான் சாதி ஒழிந்த சமுதாயம் அமைவதற்கு அல்லது வேறு வழியில் சாதியற்ற சமுதாயம் அமைந்துவிட்டாலும் தொடர்ந்து அது நீடிப்பதற்கு ஒன்றுபட்ட இந்தியாவில் முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.

அவர் இந்தியாவில் இருக்கிற மூன்று தேசியங்களைச் சொல்லுகிறார். வேடிக்கையாகச் சொல்லுகிறார் “என்ன தேசியம் இரண்டு ஆரியர்கள் ஒன்று சேர்ந்து கொள்கின்றனர். வடநாட்டு ஆரியனும், இங்கிலாந்து ஆரியனும் தங்களுக்குள் ராஜீ செய்து கொண்டு எங்கள் மீது, சமஸ்கிருத மொழி தேசியத்தை, மார்வாடி பொருளியல் தேசியத்தை, குஜராத்தி அரசியல் தேசியத்தை நுழைக்கப் பார்க்கிறார்கள்” என்று அறிக்கை விடுகிறார். அவர் ஆகஸ்ட் 15 ஐ துக்க நாள் என்று சொன்னதுகூட அந்த பொருளில் தான் சொல்லுகிறார். விடுதலை நாளை துக்கநாளாக சொல்லுகிற போது கூட அறிஞர் அண்ணா அவர்கள் மறுத்து சொல்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் கருத்துக்களை கவிதையாக சொல்லுவார். அவர் சொன்னார் ஒரு குட்டிக் குதிரையும், தாய்க்குதிரையும் பேசிக் கொள்வதைப் போல. குட்டிக் குதிரையின் வாயில் இரத்தம் ஒழுக தாய்க் குதிரையிடம் வந்து நிற்கிறது.

கடிவாளத்தில் இறுக்கிய கடைவாயில் குருதியாறு

வழிந்திட எதிரில் நின்று மகிழ்ந்திடும் குட்டி தன்னை

உடைந்த உள்ளத்தால் நோக்கி உரைத்தது கிழத்தாய்.

ஏ அடிமையே உனைப் பிணித்த ஆங்கில வண்டியில்லை வடக்குள குப்பன் உன்றன் வன்முதுகின்

மேலேறி

கடிவாளத்தை இறுக்கிறான்! கருதினாயில்லை

வாயில் வடிகின்ற குருதி காணாய்!

வலி உணர்கின்றாய் இல்லை

என்று கிழட்டுத் தாயாக பெரியாரையும், குட்டிக் குதிரையாக அண்ணாவையும் உருவகப்படுத்தி பாடுகிறார் பாரதிதாசன்!

பெரியார் திராவிடநாடு என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த பகுதி என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் “சும்மா திராவிட நாடு என்று சொல்வது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறெதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்” என்றுகூட கோபமாக சொல்கிறார்.

மாநில சுயாட்சி பற்றி பேசும்பொழுதுகூட, மாநில சுயாட்சியைப் பற்றி பேசாதீர்கள். மாநில சுயாட்சி வந்து என்ன ஆகப் போகிறது என்று கோபமாக எழுதினார். அன்று மாநில சுயாட்சி பற்றி தி.மு.க பேசிக் கொண்டிருந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு மாநிலசுயாட்சி மாநாடு நடக்கிறது. அப்போது பெரியார் சொல்லுகிறார்,

“சில மேதாவிகள் பிரகஸ்பதிகள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்தென்ன? வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது? இழிவை, மடைமையை, மானமற்றத் தன்மை யை, குறையைக் கவலையைத் தீர்க்க, அந்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் உன்னால்” என்று கேட்கிறார். அதிக அதிகாரம் கொடுத்தாலும் சரி, இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்து கருத்துகளை சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுகிற நிலையில் கூட அம்பேத்கர் மீது விமர்சனம் வைக்கிறார். அவர் சட்ட அமைச்சர் பதவியை விட்டு வெளியேறுகிறார் நான்கு காரணங்களை சொல்கிறார். வெளியேறுகிறபோது ஒன்று நாட்டினுடைய உள் விவகார கமிட்டியோ, வெளி விவகார கமிட்டியோ கூடுகிறபோது என்னை அழைப்பதில்லை. இது ஒரு குற்றச்சாட்டு. ஒரு அமைச்சரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கூட தீர்மானம் எடுக்கும் போது கூட அழைப்பதில்லை. இன்னொன்று இந்து சட்டத் தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் நேரு இழுத்து அடிக்கிறார். இதோடு இன்னும் இரண்டு காரணங்களையும் அவர் சொல்லுகிறார். ஒன்று அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுவதற்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தடையாக இருக்கிறது. மற்றொன்று காஷ்மீரை இந்துக்கள் வாழுகிற பகுதியை இந்தியாவோடும், இஸ்லாமியர்கள் வாழுகிற பகுதியை பாகிஸ்தானோடும் இணைத்துவிட வேண்டும். அதாவது துண்டு போடலாம் என்று சொல்லுகிறார் அம்பேத்கர். அப்போது அதைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் எழுதப்படுகிறது. அதில் சொல்கிறார்.

“மற்ற இரண்டு விசயத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம். ஆனால் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும். அய்.நா. சங்கத்தில் சீனாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்பது டாக்டர் அம்பேத்கரின் கொள்கை. இதை சுயமரியாதையுடைய இந்நாட்டு மக்கள் எவரும் ஒப்புக் கொள்ள முடியாது. கீழ்த்திசை நாடுகளை அடிமைப்படுத்த விரும்பும் அமெரிக்காவுக்குச் சலுகை காட்டுவோமேயானால் அது இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்காகவே முடியும். இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணக்கார, வைதீக, முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதாகவே முடியும்.

இத்தகைய ஆட்சி ஏற்படுமேயானால் முதன்மையாக விவசாயிகள் அடிமைப்பட்ட சமூகமாக வாழ வேண்ய நிலைமை தான் ஏற்படும். இந்த உண்மையை அவர் சிந்திக்காத காரணம் என்னவென்று கேட்கிறார். அடுத்து காஷ்மீரத்தைப் பற்றி அவர் சொல்லும் யோசனையையும் நாம் ஒப்புக் கொள்ள முடியாது. காஷ்மீரத்தைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தைக் காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும், பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர மக்களுக்கு நீதி சொல்வதாகும்” என்று பெரியார் சொன்னார்.

காஷ்மீர் பிரச்சினையை பற்றி நீங்கள் யார் பேசுவதற்கு? இந்தியாவும், பாகிஸ்தானும் யார்? காஷ்மீரிகள், அவர்களைப் பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவன் தன் எதிர்காலத்தை அவன் முடிவு செய்யட்டும். இப்படி அம்பேத்கர் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்லுகிறார். இந்த செயல்களில் அமெரிக்காவை நாம் துணைக்கு அழைக்கக் கூடாது. நம்மை அடிமை ஆக்கிவிடும். அடக்கிவிடும். ஒழித்துவிடும். காஷ்மீர் பிரச்சினை காஷ்மீர் மக்கள் முடிவெடுக்கட்டும் இந்தியா ஏன் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கருத்தைக் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே தந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் இலட்சியமான சாதி ஒழிப்பு நிகழ வேண்டுமானால் ஒன்றுபட்ட இந்தியாவில் முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. ஒன்றுபட்ட இந்தியாவில் சாதி ஒழிப்பு நிகழ்ந்து விடுமேயானால் அதைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியாது என்றும் உணர்கிறோம்.

எனவே தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசிய மக்களுக்கான சுய நிர்ணய உரிமை என்பது தந்தை பெரியார் கொள்கை மட்டுமல்ல, தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கையும் கூடத்தான். அதுமட்டுமல்ல தந்தை பெரியாரும் இறுதிவரை சொல்லிக் கொண்டிருந்தார் என்பது தான் உண்மை. சிலர் அதை மறுக்கிறார்கள். அடுத்து தமிழ் பயிற்றுமொழி என்று வருவதைப் பற்றி சொல்லுவதுகூட சில விவாதங்கள். அது விவாதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் எங்களுக்கும், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சிக்கும் ஏற்பட்ட விவாதத்தைப் பற்றிக்கூட இந்த நூலில் சொல்லி இருக்கிறார். அதில் பயிற்றுமொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் என்பதில் எங்களுக்கு முழு உடன்பாடேதான். அதில் எந்த கருத்து மாறுபாடும் கிடையாது. ஆனால் இடைக்கால ஏற்பாடாக - சாதி ஒழிய வேண்டும் என்று கருதிய பெரியார் இடஒதுக்கீடு கேட்டுக் கொண்டிருந்தார் - சாதி ஒழியும் வரை. எனவே தொடர்பு மொழி பற்றியும் அந்தக் கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும்; அதையும்கூட விவாதிக்கலாம்.

பெரியாரைப் பொருத்தவரை பெரியார் காங்கிரஸ்காரராக இருந்த காலத்திலே கதர்க்கடையை திறந்து வைக்கப் போகிறார். கோவையில் ஜி.டி.நாயுடு வீட்டில் தங்குகிறார் இரவு முழுக்க இருவருக்கும் விவாதம் நடக்கிறது. கதர் என்பது எதற்கும் உதவாத திட்டம். நீங்கள் ஏன் தூக்கிக் கொண்டு திரிகிறீர்கள் என்று ஜி.டி.நாயுடு கேட்கிறார். பெரியார் கதரை ஆதரித்தே பேசுகிறார். இருவரும் விவாதிக்கிறார்கள். கடைசியாக பெரியார் ஜி.டி.நாயுடுவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார். ஆம் கதர்த் திட்டம் பயனற்ற திட்டம் தான் என்பதை ஏற்றுக் கொள்கிறார்.

காலையில் கதர்க்கடையைத் திறக்கப் போகும் பொழுது வழக்கமாக தான் அணிதம் கதர் வேட்டியை விட்டுவிட்டு மில் வேட்டியை கட்டி கொண்டு போய் கதர்த்திட்டம் எதற்கும் உதவாத திட்டம் என்ற கதர்க்கடை திறப்பு விழாவில் பேசியவர் பெரியார். எனவே தனக்கு சரி என்று பட்டுவிட்டால், சரியான தத்துவமாக இருக்குமேயானால் தான் சொல்லி வந்திருக்கிறோமே என்பதற்காக அவர் பிடிவாதாமாக பின்பற்றிக் கொண்டிருந்ததில்லை. அதை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் தான் பெரியார் தொண்டன். எனவே விவாதத்திற்கு வரும் பொழுது விட்டுவிடுவது ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரைப் பொருத்தவரை அவரே கூட மொழி உணர்ச்சி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலையில் 25.7.1972ல் அது வந்திருக்கிறது. பெரியார் மறைவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் அதில் அவர் சொல்லுகிறார்.

“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் (வடமொழி) என்ற மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை; குறைந்து வந்து விட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்தி மயமாக்கி விட்டால், இந்திதம் ஆட்சிப் பீடம் ஏறி பெருமைபட்டு விட்டால். தமிழன் நிலை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்” என்று அவர் அறிக்கை விடுகிறார்.

ஆக பெரியார் மொழி உணர்ச்சியைப் பற்றியும் அந்த மொழி உணர்ச்சி உங்களுக்கும் வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறார்

கொளத்தூர் மணி

Monday, February 15, 2010

கருந்திணை

கருந்திணை

பல ஆயிரம் வருடங்களாக மாறாமல் அழுகிக் கிடந்த ஒரு சமுதாயப் போக்கை முற்றிலும் அழித்து தரைமட்டமாக்கி புதிதாக சிறப்பாக கட்டியமைக்கப் போராடியவர் பெரியார். திருமணம், பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு, காதல், உணவு முறை, கல்வி, விவசாயம், அரசியல், பொருளாதாரம், சொத்துரிமை, குடும்ப அமைப்பு ஆகிய அனைத்தைப் பற்றியும் ஒரு அறிவியல்பூர்வமான பார்வையைச் செலுத்தி ஆய்வுகளை நடத்தி முடிவுகளைக் கண்டுபிடித்து அந்த ஆய்வின் முடிவுகளை தன் காலத்திலேயே நடை முறைப்படுத்தி சமுதாயத்தை வளர்ச்சிநோக்கில் மாற்றியவர் பெரியார்.

1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டு அழைப்பில், “தனிப்பட்ட பெண்களும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டும்” என அழைப்பு விடுக்கிறார்.

1929 லேயே ”இன்பத்திற்காக கல்யாணம் என்றால் அதற்கேற்றமுறையில் கல்யாணத்திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலென பிள்ளைகளைப் பெறுவதற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதானால், அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்” என பெண்கள் தனித்து வாழ்வதை ஆதரித்து எழுதுகிறார்.

திருமணங்களைப் பற்றி மிகக்கூர்மையாக “சம சுதந்திரத்தில் இயற்கை உணர்ச்சியில் சமசந்தர்ப்பம் அளிக்கப் படாத முறையைக் கொண்ட கல்யாணங்களை நாம் விபசார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டியிருக் கிறது”என்றார்.

“ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு ‘திருமணம்’ என்ற ஏற்பாடுதான் நிரந்தரமானது என்று கருத வேண்டிய தில்லை. உலக விஷயங்கள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுவது போல திருமண முறையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது திருமண முறையே மறைந்து போகக்கூடும்” என்று குடி அரசில் எழுதுகிறார்.

1930 இல் “பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாக இருப்பதால் சாதாரணமாகப் பெண்கள் பிள்ளை பெறுவதையே அடியோடு நிறுத்திவிட வேண்டும்” என குடி அரசில் எழுதியுள்ளார்.

“ஒருவன் தான் இறந்தபிறகு தன் பெயரைச் சொல்லி தனக்காக கருமம் செய்ய பிள்ளையைப் பெற்றுவிட்டுச் செல்வது அவசியம் என்றும் பிள்ளைப் பேறு இல்லாதவர்களால் மோட்ச லோகத்துக்கும் போக இயலாது என்றும் கூறி பிள்ளைப் பேற்றை மிகவும் அவசியமாக்கிவிட்டனர். லௌகீகத்திற்காக சொத்துரிமைக்காக ஒரு பிள்ளை பெறுவது அவசியமாகக் காட்டப்பட்டதைவிட - வைதீகத்திற்காக, தனக்கென்று பார்ப்பனனிடம் அரிசி பருப்பு அழ ஒரு பிள்ளை பெற வேண்டிய அவசியம் அதிகமாக வற்புறுத்தப்பட்டது”

குழந்தைப் பேறு இல்லாமல் போனால் நரகத்தில்தான் இடம் கிடைக்கும் என்பதால் ஒருவன் தனது மனைவி மற்றொருவனுடன்கூடி பிள்ளை பெற்றுக்கொள்வதையும்கூட ஏற்றுக்கொண்டிருந்த காலத்தில், அதற்கென சில சாஸ்திரங்களைக்கூட உருவாக்கி வைத்திருந்த சமுதாயத்தில் “ பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட வேண்டும்” எனப் போர்க்குரல் எழுப்புகிறார்.

5 வயதிலும் 6 வயதிலும் ஆயிரக்கணக்கான விதவைகள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில், 4 அல்லது 5 வயதிலேயே பெண்களுக்கு திருமணத்தை நடத்திவிடும் சமுதாயத்தில் பெண்கள் தனித்து வாழ்வதை வலியுறுத்தி கலகக்குரல் எழுப்புகிறார்.

1929 லேயே பெரியார் தனது இல்லத்தில் பெண்களுக்கான ஒரு முறைசாரா அமைப்பொன்றை ஏற்படுத்தி யிருந்ததார். பெண்கள் தங்கள் சொந்தப் பிரச்சனைகள், சமூகப்பிரச்சனைகள் ஆகியவற்றை விவாதிப்பதற்காக அவரைச் சந்திக்க வந்து கொண்டிருந்தனர். 1935 இல் வீட்டை விட்டு வெளியேறிய அநாதரவான பெண்களுக்கு பெரியார் ஒரு விடுதியையும் நடத்தி வந்தார்.
15.05.1935 அன்று பெரியார் தலைமையில் நீலாவதி அம்மையார், அ.இராகவன் போன்றோர் பங்கேற்று நடை பெற்ற கூட்டத்தில் ‘தமிழ்நாடு பெண்கள் முன்னேற்ற சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்துவது என்றும் அதன் சார்பில் பெண்கள் நிலையமும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

“குடும்ப எல்லைகளைக் கடந்தும், சமுதாயம் பெண்களுக்கென்றே விதித்துள்ள பாத்திரங்களை மறுத்தும் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ விரும்பிய பெண்களுக்கான ஒரு இடமாக பெண்கள் நிலையம் என்பது சிந்திக்கப்பட்டது.” காதல்திருமணம், கலப்புத் திருமணத்தைப் பிரச்சாரம் செய்தலும் ஊக்குவித்தலும் பெண்கள் நிலையத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த பெண்கள் நிலையம் ஏட்டளவுக்குத்தான் இருந்தது. பெரியாரின் கனவாக இருந்தது. உருவாகவில்லை.

புரட்சிகரமான பெரியார் கருத்தியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச்செல்லத் துடித்த ஆயிரக்கணக் கான போராளிகள் முதலில் தத்தம் வாழ்க்கையிலும் அவற்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள், தாலி சடங்குகள் மறுப்புத் திருமணங்கள், மறுமணங் கள், தாசிகளைத் திருமணம் செய்தல், குழந்தைகளோடு இருக்கும் பெண்களைத் திருமணம் செய்தல், தனித்து வாழ்தல், பிள்ளைபெற்றுக்கொள்ளாமல் வாழ்தல் என பல்வேறு முற்போக்கு வாழ்வியல் முறைகளுக்கு பெரியார் இயக்கம் ஒரு அங்கீகாரத்தை வழங்கியது.

அந்த சுயமரியாதைக் காலம் அதே வீச்சில் தொடராமல் போய்விட்டது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெரியார் தொண்டர்கள்கூட தமது இறுதிக்காலங்களில் இருவரில் ஏதோ ஒருவரது ஜாதிக்காரர்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கணவன் ஜாதியோடு அனுசரிப்பது என்றால் மனைவியின் சுயமரியாதை யும், மனைவியின் ஜாதியாரோடு அனுசரிப்பதென்றால் கணவனின் சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த ஜாதி மறுப்பு இணையர்களுடைய வாரிசுகளின் திருமணத்தின் போதும் சிக்கல் வருகிறது. அதைக் காரணங் காட்டி ஜாதிமறுப்புத் திருமணங்களே தடுக்கப்படுகிறது.

‘கடைசிக்காலத்தில் சொந்த ஜாதிக்காரனின் தயவு வேண்டும்’ என்பதற்காக வாழ்நாளெல்லாம் தாம் பேசிவந்த கருத்துக்களுக்கு மாற்றான காரியங்களைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெரியார் தொண்டர்கள் ஆளாகி றார்கள். பெரியார் இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றும் தோழர்கள்கூட தமது வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி பயந்து தம் இல்லங்களில் காதுகுத்து, கருமாதி, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன் சீர், பங்காளிச்சீர், மொய் முறைகளை செய்திட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

‘கடைசிக்காலத்தில் தண்ணி மோண்டு குடுக்கவாவது ஒரு பிள்ளை வேண்டும்’ என்ற சமுதாய மிரட்டலுக்குப் பயந்து பிள்ளைபெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

திருமணம் வேண்டாம் என்று தனித்து வாழும் ஆண்களும் பெண்களும் சமுதாயத்தால் மிகக்கடுமையாக கேவலப்படுத்தப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள்.

கணவனை இழந்த பெண்கள், திருமண முறிவு ஆன பெண்கள் தமது சுயமரியாதையை சுதந்திரத்தை முற்றிலும் இழந்து வாழ்கிறார்கள்.

எண்ணற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் தமது இறுதிக்காலத்தில் உணவின்றி, மருத்துவம் இன்றி, கவனிப் பாரற்று மறைந்துள்ளனர். இறுதிக்காலங்களில் கொள்கைக்காகப் பணி யாற்ற முடியாமலும் தன் வாழ்க்கையில்கூட கொள்கையைப் பின்பற்ற முடியாமலும் மனம் வெந்து மறைந்துள்ளனர்.

மேலத்தஞ்சை பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்களின் விடியலுக்காக உழைத்த திருமங்கலக்குடி கோவிந்தராசன் அவர்களின் மறைவு நாளில் ஒரு கருப்புச்சட்டைகூட உடன் இல்லை.

1958 இல் பெரியாருக்கு கடுங்காவல் தண்டணை வழங்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பார்ப்பனர் மீது ஆசிட் அடித்து கத்தியாலும் குத்திய போராளி - பெரியார் படத்தை செருப்பால் அடிக்க முயன்ற விபூதி வீரமுத்தின் மண்டையை உடைத்த தோழன் - வெளிப்படையாக இயங்காமல் பெரியாரின் தற்கொலைப்படை யாகவே வாழ்ந்த தோழர் ஆசிட் தியாகராசன் இப்போது ஆந்திரா எல்லையில் உள்ள தடா என்ற கிராமத்தில் தேவாலயம் ஒன்றில் மணி அடித்து ஊழியராகப் பணியாற்றி காலத்தைக் கடத்துகிறார்.

ஆசிட் தியாகராசனின் மிக நெருங்கிய தோழர். அவரது அனைத்து செயல்களிலும் தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழர் சின்னச்சாமி தஞ்சை அரசு மருத்துவமனையில் 1000 ரூபாய் பணமில்லாமல் மருந்து வாங்கமுடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.

அந்த தோழர் சின்னச்சாமியின் துணைவியார் இருமாதங்களுக்கு முன்பு பெரியாரின் வாரிசுப் பட்டத்தை தூக்கிச் சுமக்கும் வேந்தரை, தமிழர் தலைவரை நேரில் காணச் சென்றார். ஏன் உள்ளே வந்தாய்? யார் இவரை உள்ளே விட்டது? என விரட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தக் கொடுமையைச் சொல்லி அழக்கூட ஆளில்லாத அவருக்கு ஆசிட் தியாகராசன் சென்றுதான் ஆறுதல் வழங்கி வந்திருக்கிறார்.

திருச்சியில் 1957 சட்டஎரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றதால் தான் நடத்தி வந்த உணவுவிடுதி தொழிலை முழுமையாக இழந்த தோழர் மாரியப்பன் இன்றும் அதே திருச்சியில் கழிவறையை சுத்தம் செய்து அந்த வருமானத்தில் அதே கழிவறையில் வசித்து வருகிறார்.

இதுபோன்ற மோசமான மறுபக்கங்களின் பட்டியல் நீளமானது. இவையெல்லாம் பெரியாரியலை ஏற்றுக் கொண்டு உழைத்த தோழர்கள் சிலரின் நிலை. இந்த நிலையை மாற்ற வேண்டும். முதலில் பெரியார் கருத்துக்களை பின்பற்றுபவர்களுக்காவது ஒரு பாதுகாப்பு அரண் தேவை.

ஒரு இந்து கடைசிவரை இந்துவாகவே வாழமுடிகிறது. தனது வாரிசுகளை இந்துவாகவே உருவாக்க முடிகிறது. ஒரு கிறிஸ்துவராலும், இஸ்லாமியராலும் தனது மதத்தை இறுதிவரைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் ஒரு பெரியாரியல்வாதி இறுதிக்காலங்களில் இந்துவாக ஜாதிக்காரனாக மாறவேண்டிய அவலம் உள்ளது.

ஒரு ஆரியன் தான் தனது பண்பாட்டைக் கட்டிக்காப்பது மட்டுமல்லாமல் நமது திராவிடர் பேரினத்தையும் அவனது ஆரியப் பண்பாட்டை பின்பற்றச் செய்து விட்டான். அந்த ஆரியத்துக்கு எதிரான களத்தில் நிற்கும் பெரியார் தொண்டர்களாவது தமது வாழ்விலாவது ஆரியத்துக்கு எதிரான அறிவியல் பண்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கி.பி. 1925 முதல் 1938 வரையிலான சுயமரியாதைக் காலம் அதே வேகத்தில் அதே பார்வையில் அதே வீச்சில் மீண்டும் உருவாக வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணை வழிப்பட்ட பண்பாடுகளை அறிந்த தமிழினம் - தான் அவசியம் பின்பற்றியிருக்க வேண்டிய பண்பாடான சுயமரியாதைக்காலப் பண்பாட்டை மீண்டும் கையிலெடுக்க வேண்டும் என்ற பேராவலில் ஒருங்கிணைந்த தோழர்களின் கூடல்தான் கருந்திணை.

முதுபெரும் பெரியார் தொண்டர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது இறுதிக்காலம் வரை கொள்கைப்படி வாழ்வதற்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப கொள்கைப்பிரச்சாரத்திற்கு அவர்களைப் பயன் படுத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தனித்து வாழ விரும்பும் ஆண்கள், தனித்து வாழ விரும்பும் பெண்கள், மணமுறிவுக்குப் பிறகோ அல்லது துணையை இழந்ததற்குப் பிறகோ மறுமணம் வேண்டாம் என வாழும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் இறுதிவரை சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ பாதுகாப்பான இடம் வேண்டும்.

ஜாதி, மத, தாலி மறுப்பு இணையர்கள், விதவை மணம் புரிந்தோர், மறுமணம் புரிந்தோர் இறுதிவரை கொள்கை வழிப்படி வாழ வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப்பிரிவினரும் ஒன்றாகக் கூடி வாழ ஓர் இடம் வேண்டும். அதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் நோக்கில் திண்டுக்கல்லில் அறிவியல் வாழ்வியல் இல்லமாக முதல் கருந்திணை விடுதியை உருவாக்க உள்ளோம். திண்டுக்கல்லிருந்து தேனி செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ள கும்மம்பட்டி என்ற கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு மாந்தோப்பில் அது உருவாக உள்ளது. கருந்திணை விடுதிக்கான முதல் ஆலோசனைக் கூட்டம் 09.01.2010 அன்று திண்டுக்கல்லில் நடை பெற்றது. 29.01.2010 அன்று கருந்திணை என்ற பெயரில் திண்டுக்கல்லில் ஒரு அறக்கட்டளையும் பதிவு செய்யப்பட்டு விட்டது. எந்த ஒரு இயக்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் பெரியார் தொண்டர்களுக்கான பொது வான இல்லமாக கருந்திணை இயங்கும். இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் காதலர் தினமான 14.02.2010 அன்று செம்பட்டியில் நடைபெறும். எமது இந்த முயற்சி குறித்த உங்களது கருத்துக்களையும், முயற்சி சரியானது என்றால் ஆதரவையும், உதவியையும், ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.

முகவரி : கருந்திணை, 1 / 810 முத்தமிழ் நகர், அடியனூத்து. அஞ்சல், திண்டுக்கல் . 624003
மின்னஞ்சல் : karunthinai@gmail.com

Friday, December 25, 2009

குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?

இயக்குநர் தோழர் சீமான் அண்மையில் போராளி இமானுவேல்சேகரன் நினைவிடத்துக்கு சென்றார். பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கும் சென்றார். அரசியலுக்குப் போய்விட்டால் எல்லோரையும் அனுசரித்தே ஆகவேண்டும். அனுசரித்துக்கொள்ளட்டும். தேவர் நினைவிடத்துக்கு சென்றதற்காக விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் திராவிடர்கழக மாநாட்டிலேயே தேவர் படத்தைத் திறந்துவைத்த தோழர் வீரமணியை முதலில் விமர்சிக்கவேண்டும். இந்த ஆண்டுவரை தேவரின் குருபூஜைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டு வரும் விடுதலை நாளேட்டை விமர்சிக்கவேண்டும். பெரியார் தி.க, ம.க.இ.க, ஆதித்தமிழர் பேரவை மற்றும் சில நக்சல்பாரி அமைப்புகள் தவிர அனைவரையும் விமர்சிக்க வேண்டும். நமது நோக்கம் அது அல்ல.

சீமான் மட்டுமல்ல. தோழர் திருமாவளவன், தோழர் தா.பாண்டியன், தோழர் வை.கோ போன்ற பல முக்கியத் தலைவர்களும் பசும்பொன் தேவரைப்பற்றியும், குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை கூறிஉள்ளனர். இந்தத் தலைவர்கள் அரசியலுக்காக செய்யும் சில மாற்று அணுகுமுறைகளை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றையே தவறாகச் சொல்வதும், ஒரு தத்துவத்தைக் கொச்சைப்படுத்துவதும், தமிழருக்கு வரலாற்றை உருவாக்கிய தலைவனை சிறுமைப்படுத்துவதையும் விமர்சித்தே ஆகவேண்டும்.

குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து பெரியார் என்ன செய்தார்? என அந்த மக்கள் கேட்கிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தேவர்களுக்கு பெரியார் என்ன செய்தார் என ஒரு சராசரி மனிதன் கேட்டால் ஒரு உண்மையான பெரியார் தொண்டன் அடுத்த நொடியில் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

கள்ளர் மறவர் அகமுடையார்கள் அனைவரும் பார்ப்பனர்களின் தேவடியாள் மகன்கள் என இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கும் இந்து மதத்தை எதிர்த்து அந்த சூத்திரப்பரம்பரைச் சட்டமான இந்து லாவை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் தேவர் என்ன செய்தார்? என்று கேட்டிருக்க வேண்டும். அதன்பிறகு ஆதாரங்களைத் தேடிப்பிடித்து குற்றப்பரம்பரைச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா இல்லையா என்பதைச் சொல்லலாம்.

நான் திருடன், திருட்டுப்பரம்பரை என்பதை விட நான் தேவடியாள் பரம்பரை என்பதைத்தான் கேவலமாகக் கருதுவேன். சூத்திரப்பரம்பரை என இன்னும் இந்து மதத்தில் இருக்கிறதே அதை இன்னும் அனுமதித்துக்கொண்டு மானங்கெட்ட வாழ்வு வாழ்கிறேனே அதைத்தான் கேவலமாகக் கருதுகிறேன். மீசையை முறுக்கும் ஒவ்வொரு தமிழனும் இதைத்தான் கேவலமாகக் கருதுவான். எங்களைத் தேவடியாள் மகன்களாக வைத்திருக்கும் இந்து மதத்தை வெட்டிச்சாய்க்க இறுதிவரை போராடிய தலைவர் பெரியார். ஆயிரக்கணக்கான தோழர்களோடு இந்திய அரசியல் சட்டதையே கொளுத்தினார். எதற்காக? சட்டப்படி நாம் சூத்திரப்பரம்பரை என்பதை அழிப்பதற்காக. தமிழ்நாட்டில் கள்ளர், பள்ளர், மறவர், பறையர், வன்னியர், கவுண்டர் யாராகப் பிறந்தாலும் அவர்களுக்குத் தலைவன் முதலில் பெரியார். அப்புறம் யாரோ இருக்கட்டும். அவரை விமர்சிக்கும் முன்னர் வரலாறுகளைக் கொஞ்சம் படித்துப்பார்த்து விமர்சிக்க வேண்டும்.

குற்றப்பரம்பரை என்பதை இப்போது சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களே பெருமையாகத்தான் கருதிக்கொள்கிறார்களே தவிர. குறிப்பாக கள்ளர்கள் யாரும் குற்றப்பரம்பரை எனச் சொன்னதை கேவலமாக கருதவில்லை. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தேவர்கள் மட்டுமல்ல குறவர்களும் தான் கைரேகை வைத்தார்கள் என்றால் நம்மோடு அவர்களைச் சேர்த்துப் பேசாதே என சண்டைக்கு வருபவர்கள்தான் அதிகம். அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு மீசையை முறுக்கித் திரிபவர்கள் இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குற்றப் பழங்குடியினர் சட்டம் ( Criminal Tribes Act )

கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக்கூட்டமாக இடம் விட்டு இடம் மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்துகொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத் திருந்தது. தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே குற்றப்பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று ஒரு தவறான கருத்து அனைத்து மட்டங்க ளிலும் உள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில் 89 சாதிகள் இப்பட்டியலில் இருந்தன.

அதில் குறவர், உப்புக்குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக்குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, வலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக்கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாரி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப்பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

குற்றப்பரம்பரைப் பட்டியலில் உள்ள சாதிகளில் பிறந்த அனைத்து மக்களும் கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் 2 கோடிப்பேர் தினமும் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். அப்படியெல் லாம் எதுவும் நடக்கவில்லை.

மேற்கண்ட சாதிகளில் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.

அதேபோல கைரேகை வைக்கும் இடம் காவல்நிலையம் அல்ல. உள்ளுரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம்பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும் அதிலேயே கைரேகை வைக்கலாம். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச்சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப்பெரியவர் குழுவில் இந்த அடையாளச்சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச்சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச்சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாக காவல்நிலையத் தில் கைரேகை வைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.

சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியகுழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் ஆவார்.

1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களான ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. இப்படி கள்ளர்களை வைத்தே கள்ளர்களை அடக்கிய நுட்பத்தை ஆங்கிலேயருக்கு அறிவுறுத்தி செயல்படுத்தியவன் அப்போது மதுரை மாவட்ட துணைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஏ.கே. இராஜா என்ற பார்ப்பான்.

ஆகவே இச்சட்டம் தேவர்களுக்கு மட்டும் இருந்த சட்டமல்ல. தேவர்களிலும் அனைத்து மக்களுக்கும் பொருந்திய சட்டமல்ல. அனைத்து ஜாதிகளிலும் இருந்த உண்மையாகவே திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட சட்டம். 1932 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பசும்பொன்தேவர் இப்படிப்பட்ட உண்மைக்குற்றவாளி களை ஒடுக்குவது தவறில்லை என்றே1 பேசியிருக்கிறார்.

போராட்டங்கள்

இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும் பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர் தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.

தமிழ்நாட்டில் செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப்பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911 லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப்பகுதி ஈசநாட்டுக்கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.

1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகமுக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.

அதன்பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்த வரும் மதுரையில் குடியிருந்தவருமான ஒரு வழக்கறிஞர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை வரவழைத்த மலையாளியான ஜார்ஜ்ஜோசப். இவர்தான் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாக குற்றப்பரம்பரைச் சட்டத்திற் எதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பு துரை’ என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்றுவரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.

1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக்குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,

...இந்தியா மந்திரி அவர்களே குற்றப்பரம்பரையினர் எனப்படுபவரின் கொடூரநிலையை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். குற்றப்பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக்கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன். ..

...இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்தச் சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச்சட்டம் பத்தி 108 ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?...

...ஒருவர் ஆதிவாசியா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது.

என விரிவாகப் பேசி இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப்பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப்பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்2.

இதற்கெல்லாம் பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார். 1933 செப்டம்பர் 25 ஆம் தேதி பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப் பழங்குடியினர் சட்டத்தில் இணைக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் தேவர் அச்சட்டத்தை எதிர்க்கத் தொடங்குகிறார். 1934 மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவரும் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுலக் கிளர்ச்சியில் இணைந்து போராடியவருமான பி.வரதராஜூலு நாயுடு தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழியவேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக இராஜதுரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு இராஜமகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டணையில் இருந்தார். அவரை வரதராஜூலு நாயுடு நேரில் சந்தித்தார். அதன்பிறகு தான் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார். ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக்கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜீலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதக்கிருஸ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர். ஆகியோர் நியமிக்கப் பட்டனர். அப்போதைய அரசை சந்தித்து இக்குழு மனு ஒன்றை அளித்துள்ளது.

மிக முக்கியமாக தினகரன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் முதுகுளத்தூர் கலவரம் என்ற மிக முக்கிய வரலாற்றுப் பதிவை வெளியிட்ட தேவர் ஜாதியைச் சேர்ந்த தினகரனும் இக்கொடுஞ்சட்டத்தை எதிர்த்துப் போராடியுள்ளார்.

1934 இல் அபிராமத்தில் நடைபெற்ற மாநாட்டைத் தவிர குற்றப்பழங்குடி சட்டத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் போராட்டத் தையும் பசும்பொன் தேவர் நடத்தவில்லை. பல கூட்டங்களில் அதுபற்றிப் பேசியுள்ளார். இரண்டாம் உலகப்போர் நடந்த காலங்களில் 1945 வரை தேவர் ஆங்கிலேயே அரசால் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே இருந்தார். 1945 செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார். 1947 ஜூன் 5 ஆம் நாள் வெள்ளைக்காரன் இருக்கும் போதே குற்றப்பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அச்சட்டம் நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளாக முத்துராமலிங்கத்தேவர் உட்பட யாரும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களையோ குறிப்பிடத்தகுந்த போராட்டங்களையோ நடத்தவில்லை. முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகும் - தேவர் காங்கிரசோடு அனுசரித்து இச்சட்டம் பற்றி கவலைப்படாத போதும் பெரியார் உறுதியாக அச்சட்டத்தை கடைசிவரை எதிர்த்திருக்கிறார்.

திராவிடர் இயக்கத்தின் சாதனைகள்

1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசரின் செயலரான எட்வின் சாமுவேல் மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜென்ரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி.எம். நாயர், கே.வி.ரெட்டி. சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன்வைத்தனர். அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச்சொல்லி அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம். நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார்.

பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தது.

கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ் அலுவலரை நியமித்தது. லேபர் கமிஷனர் என அப் பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழுவீச்சில் செயல்படுத்தியது.

கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.

கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக்கடனுதவி அளித்தது.

கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து. அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.

இளைஞர்களுக்குத் தொழில்பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.

மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.

தஞ்சைமாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.

பெரியாறு அணைப் பாசனத்திட்டத்தில் கள்ளர்நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச்செய்தது.

1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள் விவசாயத்திற் காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங் களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங் களுக்கு மாகாண அரசே நிதிகொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற் கும் கடனை அளித்தது3.

இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத்தேவர் அல்ல. இந்த மாற்றங்கள் நடக்கும் போது தேவர் பொதுவாழ்வுக்கே வரவில்லை.

அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசு தான். வரதராஜீலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசில்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அப்பிரிவு மக்களை அப்படியலில் இருந்து நீக்கியது பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.

இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப்பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழிந்தது.

ஆக குற்றப் பழங்குடியினர் சட்டத்தை ஒழிப்பதற்கும் அச்சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட கள்ளர்கள் உட்பட அனைத்து ஜாதி மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உழைத்தது பெரியாரின் தொண்டர்கள் தான். காங்கிரஸ் அரசானாலும், நீதிக்கட்சி அரசானாலும் அரசியல் வாதியாக இருந்தாலும் அரசுப்பதவியில் இருந்தாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து சரியான செயல் களைச் செய்தவர்கள் பெரியார் ஆதரவாளர்களே! பெரியார் தொண்டர்களே! திராவிடர் இயக்கத்தவர்களே!

பெரியாரும் குற்றப்பரம்பரைச்சட்டமும்

முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கர் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டுப்ளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நீதிக்கட்சி உழைத்த உழைப்பை நினைவுகூர்ந்து நீதிக்கட்சிக்கு ஆதரவாக தேவர் செயல்பட்டிருந்தால் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்த்த போராளி என முழுமையாக அவரைப் பாராட்டியிருக்கலாம். அந்தத் தேர்தலில் பெரியார் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது,

. . . முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்தர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டபறகு அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதல் முதல் மாறுதல் ஏற்படலாயிற்று. அதாவது 1920ம் வருஷத்துக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் 1க்கு (1,40,00,000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி யென்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரி பதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பறகு இன்று கல்வி இலாக்காவுக்கு வருஷம் 1க்கு (225,00,000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கிவைத்து அதற்கேற்றாற் போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் சர்வ கலாசாலைகளை யும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்தி “சண்டாளர்கள்’’ “மிலேச்சர்கள்’’ “சூத்திரர்கள்’’ ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.

இதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம் சுதந்தர உணர்ச்சியும் சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.

குடி அரசு

என்றார். இந்தத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வாரானார். அனைத்து அடக்குமுறைச்சட்டங்களையும் ஒழிப்பேன் என்ற சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச்சட்டங்களை முன்பைவிட மிகக்கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.

சட்டசபையில் ஒருமுறை திருமங்கலம், செக்கானூரணி பகுதிகளில் இன்னும் குற்றப்பரம்பரைச் சட்டம் நடைமுறையில் உள்ளது என தேவர் பேசியபோது, இராஜாஜி, செக்கானூரணி பகுதியில் இருந்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை எனத் திமிராகப் பேசினார். பதிலுக்கு தேவர் எதுவும் பேசவில்லை. அந்தக் காலத்தில் பெரியார் குற்றப்பரம்பரை உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.

. . .தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதி யளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுல கமே பொன்னுலக மாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள் தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லைப்புற மாகாணத் தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள். காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படு கின்றன.

காங்கரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் யோக்கியப் பொறுப்புடையவர் களானால் நேர்மையுடையவர்களானால் அடக்கு முறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா?

அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு மசோதாவை அக் கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்ப மளித்த காங்கரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம். . .

குடி அரசு 24.07.1938

இந்தக் காலத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் என்று ஒரு புதிய ஒடுக்கு முறைச் சட்டத்தை யும் இராஜாஜி அரசு பயன்படுத்தத் தொடங்கியது. நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்துமூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் ஜாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர் காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அப்போது குடி அரசில் பெரியார்தான் அடக்குமுறைச்சட்டங்களை எதிர்த்து எழுதினார்.

…இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி “நமது சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 71எ படி 4மாதம், 6மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.

மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும் 10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண் டும் வருகிறார்கள். “இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங் கள் மாத்திரம் தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்துவிடு வார்கள்? என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக் கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி “நமது தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அறுப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில் “இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள்மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிக “தயாள குணத்தோடு “இழகிய மனம் கொண்டு பேசியிருக் கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது.

. .மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக் காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள் தனமாயிருந் திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார்.

. . . நாம் வெறுத்த நாம் ரத்துச் செய்தே தீருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத் தானா நாம் கையாளவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மா ஜியே கூறினாலும் அது குற்றங்குற்றமே யென்று தான் நான் கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு ""தேசத்துரோகி''ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

குடி அரசு 02.10.1938

1937 ஆம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த தவறான நிலைப்பாடு குற்றப்பரம்பரைச் சட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. 1934 அபிராமம் மாநாட்டுக்குப் பிறகு - அந்த மாநாட்டுக் கோரிக்கையை அப்போதைய பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி அரசு செயல்படுத்திய பிறகு கைரேகைச்சட்டம் நீக்கப்பட்ட 1947 ஜீன் 5 வரை தேவர் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்பதோடு, கூடவே இன்னும் கடுமையான அடக்குமுறைச்சட்டங்கள் வந்தபோதும் அமைதியாகவே இருந்தார். 1937 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குற்றப்பரம்பரைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச்சட்டங்களை ஏன் நீக்கவில்லை என காங்கிரசையோ இராஜாஜியையோ எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 1939 வரை காங்கிரஸிலிருந்து நேதாஜி வெளியேற்றப்படும் வரை காங்கிரசிலேயே இருந்துவிட்டு தனது அரசியல் ஆசான் சீனிவாச அய்யங்கர் அறிவுரையின் பேரில்தான் நேதாஜியுடன் பார்வர்டு ப்ளாக்கில் இணைகிறார். 1938 இல் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்த பின்னரும் தனது ஜாதி மக்கள் கல்வி வாய்ப்பை இழந்தபின்னும் 1939 இல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் சீனிவாச அய்யங்காருடன் பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார்.

பெரியாரும் தேவர்களும்

1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகத்துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடைஎன்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார். 1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும்தான் என்பது இராமச்சந்திர சேர்வைக்குத் தெரியும். அதனால் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பெரியாருக்கு துணையாக்கினார்.

1952 இல் இராஜாஜி மீண்டும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்கிறார். தகப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்யவேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். சுமார் 6000 பள்ளிகளை மீண்டும் இழுத்து மூடினார். குற்றப்பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்யமுடியும்? திருடத்தானே முடியும்? அதை எதிர்த்துக் களம் கண்டவர் - இராஜாஜியை விரட்டி அடித்து குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர் பெரியார். அந்தக் காலத்தில் குலக்கல்வித்திட்டத்தை ஒழிக்க தனது கள்ளர், மறவர், அகமுடையர்களுக்காக தேவர் என்ன செய்தார்?

1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தில் பிறந்த ஆர்.எஸ்.மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்டஆட்சித்தலைவராக இருந்தார். ஒரு நிலச்சிக்கல் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெரியார் கொதித்தெழுந்தார். 1956 நவம்பர் 4 ஆம் நாள் திருச்சியில் இதற்காக ஒரு சிறப்பு கண்டனக்கூட்டத்தை நடத்துகிறார். ‘பார்ப்பான் ஆளும் நாடு கடும்புலிகள் வாழும் காடு’ என அந்தக் கூட்டத்தில்தான் முழங்கினார். நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் அந்த உரை நூலாகவே வெளிவந்துள்ளது. அந்த உரைக்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கள்ளர் சமுதாயக் கலெக்டருக்காக கடுங்காவல் தண்டனை பெற்றவர் பெரியார். 1960 செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாள் அன்று அதே ஆர்.எஸ். மலையப்பன் பெரியாருடன் ஒரே மேடையில் உரையாற்றினார். இன்றுவரை அந்த மலையப்பனின் ஊரிலும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் பெரியார் சிலையும் பெரியார் படமும் சிறப்பாக வீற்றிருக்கிறது. இன்றும் திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லப்படும் பகுதியாக அப்பகுதி உள்ளது. மலையப்பன் விவகாரத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

சட்டப்படி கள்ளர்களையும் மறவர், அகமுடையார்களையும் அனைத்து பிற்படுத்தப்பட்ட. தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களென்றும் சூத்திரர்களென்றும் இழிவுபடுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்குமாறு 1957 இல் பெரியார் ஆணையிட்டார். நூற்றுக் கணக்கான தேவர்கள் எரித்துச் சிறை சென்றார்கள். இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தில் தேவரின் பங்கு என்ன?

மண்டல்குழு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளில் ஒருவர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி இரத்தினவேல்பாண்டியன். அவர் தனது தனிப்பட்ட தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமைக்காக பெரியார் உழைத்த உழைப்பை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

குற்றப்பரம்பரையில் பிறந்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது திராவிடர்இயக்கம். அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளே நினைவுகூறும் பெரியார் பணியை யாரோ சிலர் கேவலமாகப் பேசுவதை ஒரு முக்கியச் செய்தியாக ஒரு பெரியார் தொண்டர் என்பவரே சொல்வது வருத்தத்துக்கு உரியது. கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றப் பழங்குடி சட்டத்தைப் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களில் அப்போதைய ஆட்சியாளரின் நடவடிக்கைகள், அப்போதைய சமுதாய இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அச்சட்டம் பற்றிய பல மூடநம்பிக்கைகள் ஒழியும்.

தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்

1956 இல் நேரு தட்சிணப்பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு. அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி.இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20 அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்கவேண்டும் என்றார். தட்சிணப்பிரதேச திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெரியாரது அறிக்கையில்,

“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங் களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால்,

ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.

இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை.ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.

மூன்றாவது - இவர்கள் இருநாட்ட வர்களும் பெயரளவில் இருநாட்ட வர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள்.அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளா தாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்ப தால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக் கிறார்கள்.

இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந் திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.”

என முழங்கினார்.

தட்சிணப்பிரதேச எதிர்ப்புப் போராட்டக்குழுவில் பெரியார் வைத்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. மொழிவாரிமாகாணபிரிப்பு மட்டும் போதாது.

1. மத்திய அரசுக்கு படை, போக்குவரத்து, வெளியுறவு ஆகிய துறைகளைத் தவிர மீதமுள்ள அனைத்துத்துறைகளும் பிரியப்போகும் மொழிவாரி மாகாணங்களுக்கே இருக்கவேண்டும்.

2. பிரியப் போகும் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்ட வேண்டும்.

என இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தக் கருத்துக்களுக்கு அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனார், தமிழரசுக்கழக ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட குழுவினர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே பெரியார் இக்குழுவில் சேராமல் தனியே போராடினார்.

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ..தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை”.

என்பது தான் அப்போது பெரியாருடைய நிலைப்பாடு. எல்லோரும் அப்போது வெறும் பிரிவினைக்காக மட்டும் போராடியபோது பிரிவினையோடு உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிற்படுத்தப்பட்டோர் நலனாகட்டும், தாழ்த்தப்பட்டோர் நலனா கட்டும், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு, மாற்று வாழ்வியல் என எந்த இலக்கை எடுத்துக்கொண்டாலும் அந்த இலக்குகளுக்காகப் போராடுபவர்களுக்கு அடிப்படைப் பாடம் பெரியாரியல். அனைத்துத் தளங்களிலும் போராடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி பெரியார். அவரது சிந்தனைகள் பெரியார் திராவிடர் கழகத்தால் காலவரிசைப்படி தொகுக்கப் பட்டு அச்சிடப்பட்டும் தோழர் வீரமணி அவர்களால் வெளியிடத் தடைசெய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. பெரியார் சிந்தனைகள் முழுமையாக வெளிவந்தால் தோழர் தா.பாண்டியன், தோழர் திருமாவளவன், தோழர் சீமான் போன்றோர் வினா எழுப்பும் சூழலே வந்திருக்காது.

- அதி அசுரன்

atthamarai@gmail.com


ஆதார நூல்கள்

1. பசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள்:முனைவர்.க.செல்வராஜ்

2. பாபாசகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 5

3. நீதிக்கட்சி பாடுபட்டது யாருக்காக?: முனைவர் பு.இராசதுரை

4.தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு : கவிஞர் கருணானந்தம்

5.குடி அரசு இதழ்கள்

6. பெரியார் முழக்கம் வார இதழ்

Sunday, December 13, 2009

தமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும் - பெரியார்

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது.
வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

'மொழி - எழுத்து' நூலிலிருந்து