Sunday, December 13, 2009

வெண்மணி சம்பவம்: பெரியாரின் எதிர்வினை


பெரியார் தலித்துகளுக்கான போராட்டங்களில் பாரபட்சத்துடன் நடந்து கொண்டாரென்று தொடங்கிய விவாதம், இன்றைய தலித் புத்தி ஜீவிகளென வர்ணிக்கப்படுபவர்களால் அவரை தலித் விரோதியெனவும் நிலப்பிரபுத்துவ ஆதரவாளரென்றும் பழிசுமத்துமளவிற்கு வந்துவிட்டது. இந்து மதத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஒழிக்காமல் ஜாதிப் படிநிலையை தவிர்க்கவியலாது என்பதிலும் பஞ்சமர்களின் விடுதலையின்றி சூத்திரர்களின் விடுதலையும் சாத்தியமில்லையென்பதிலும் பெரியார் கொண்டிருந்த தெளிவும் நம்பிக்கையும் அவரை மிகவும் மேலோட்டமாக வாசிக்கும் நபராலும்கூட இனங்கண்டு கொள்ளமுடியும் என்றிருக்க, இப்பழிசுமத்தல்களின் பின்னணி, திராவிடக் கட்சிகளில் சிதறிக்கிடக்கும் தலித்துக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கிணையான ஓட்டுக்கட்சியாய் தம்மை ஸ்தாபித்து, ஆட்சியதிகாரங்களில் பங்கு கேட்கும் மலிவான அரசியல் உத்தியேயன்றி, சுத்த சுயம்புவான தலித் எழுச்சிக்கான முன்னேற்பாடுகள் அல்ல.

ஈரோடு ஆதிதிராவிடர் வாலிபர் சங்க விழாவில் தந்தைபெரியார் ஆற்றிய உரையிலிருந்து சிறுபகுதியொன்றை கோடிட்டுக்காட்டுவது இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அமையும்:

"உலகமே வெறுத்துத் தள்ளிய சைமன் கமிஷனை, சுயமரியாதை இயக்கம்தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லிக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன்தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும், சூழ்ச்சிசெய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் ஸ்தானம்பெற முடிந்தது. உங்களுக்குத் தனிக்கிணறும், தனிக்கோவிலும் கட்ட வேண்டும் என்று சொன்ன தேசியங்களும் மாளவியாக்களும் உங்களுக்குப் பொதுக்கிணற்றில் உரிமையும், பொதுக் கோவில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக்கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுயமரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும், தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரச்சாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்''காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக கூறிக் கொண்டதை அம்பேத்கரைப் போலவே வன்மையாகக் கண்டித்த பெரியார், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான வேறுபாட்டினை உணர்ந்திருந்ததன் காரணமாக தன்னை எச்சூழலிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக சொல்லிக்கொள்ளாத நேர்மையை அவர் ஆதிதிராவிடர்கள் மாநாடுகளில் கலந்துகொண்டு பேசியபொழுது ‘நீங்கள், உங்களுடைய' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியன் மூலமாக விளங்கிக் கொள்ளலாம். சூத்திரன் என்பதற்கான பொருள் தாசிமகன், வேசிமகன் என்றிருப்பதால் ‘பறையர்' என்பதை விடவும் ‘சூத்திர'னென்பது இழிவானதென்றவர் ‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரி பேசப்படும் பேச்சுக்களும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களின் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்குமே' (குடி அரசு 11.10.1931) என்ற தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கான தவிர்க்கவியலாத காரணங்களையும் சுட்டிக்காட்ட தவறியதில்லை.

பூனா ஒப்பந்தத்தின்போது பெரியார் ஐரோப்பியாவிலிருந்தபோதும் அம்பேத்கருக்கு ‘6, 7' கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிட கேலவமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்துவிடாதீர்கள்' என்று தந்தி கொடுத்ததுடன் ‘மகாத்மாவின் பொக்கவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரகஸ்பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்ததும் கையெழுத்து போட்டதும் தலித்துகளின் விடுதலையைப் பாழாக்கிவிட்ட'தென விமர்சனம் செய்தவர் பெரியார். மேலும் ‘பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையாவது ரத்து செய்யப்பட வேண்டுமென'வும் (குடி அரசு 03.02.1935) பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானதெனவும் வலியுறுத்தினார். (குடி அரசு 8.11.1925).பெரியாரின் சமகாலத்தியவர்களும் அவரால் மதிக்கப்பெற்ற தலைவர்களுமான முகமது அலி ஜின்னாவும், அம்பேத்கரும் மதம், ஜாதி அடிப்படையில் முஸ்லீம்களாகவும், தலித்துகளாகவும் தம்மக்களை ஒருங்கிணைத்த சூழலில் பெரியாரோ, பார்ப்பனரல்லாதார் என்ற வகைப்பாட்டிற்குள் முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர் முதலிய இந்துகளல்லாதவர்களையும், இந்து மதத்திற்குள் பிராமணர் நீங்கிய பலஜாதியினரோடு தீண்டத்தகாதரென தள்ளி வைக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் கடினமான செயல்திட்டத்தை முன்வைக்க, அது இன்னும் நிறைவேறாமல் காலம் நீடிக்கிறது. இந்நிலையில் பெரியாரின்மீது சுமத்தப்படும் தலித் விரோதியென்ற குற்றச்சாட்டை நிரூபிக்க 44 தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி சம்பவம் குறித்து அவர் பேசவில்லையென்பது சான்றாக்கப்பட்டு வருகிறது.


‘நிறப்பிரிகை'யின் கூட்டு விவாதத்திலும் பலரால் இக்கருத்து சொல்லப்பட்டு, பெரியாரிய ஆய்வறிஞர்களுள் ஒருவரான பேரா. அ. மார்க்ஸ் அவர்களும் அது குறித்து தமக்கு தெரியவில்லையென்று கூறியுள்ள சூழலில் (பெரியார் : நிறப்பிரிகை கட்டுரைகள் டிசம். 1995-விடியல் வெளியீடு) வெண்மணி குறித்த பெரியாரின் எதிர்வினையைக் கவனப்படுத்துவது அவசியமாகிறது.வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்து வந்தாரென்பதும் 28.12.68 அன்றுமாலையே இல்லம் திரும்பினாரென்பதும், டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் திரு.கி.வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியக் கிடைப்பதால், பெரியாரால் அறிக்கையெதுவும் எழுதவியலாததை அனுமானிக்கலாம். எனினும், 12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது:"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல.

இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''பெரியாரது வழமையான பாணியில் இவ்விமர்சனமும் பொதுப்புத்தி சார்ந்தும் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கிறது.


சோவியத் ரஷ்யாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் விதந்தோதிய பெரியார் இந்திய கம்யூனிஸ்டுகளை எப்பொழுதுமே பொறுக்கித் தின்பவர்களென்றே அழைத்து வந்தார். அதைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் பெரியாரையும் அவர் வலியுறுத்திய இன, பிராந்திய உணர்வுகளையும் கண்டு கொண்டதில்லை. ‘இந்தியாவில் சமதர்மமும் பொதுவுடைமைத் தத்துவமும் ஏற்பட வேண்டுமானால், வருணாசிரமமும், பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழியவேண்டும்.' (குடி அரசு 14.6.1931)‘வருணாசிரமத்தையும் பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடையை ஏற்படுத்திவிட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும் சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச்செய்யும்...' (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.‘கம்யூனிஸ்ட்-எவன் காலை நக்கியாவது வயிறுவளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே; பார்ப்பான் வலுத்தால் அவன்கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே; உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்' (திருச்சியில் 4.11.1973 அன்று பேசியது) என்ற கணிப்பும் இன்றையவரைக்கும் நீடிக்கும் நிலைதான் இருக்கிறதெனினும் சமீப காலமாக கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை ஏற்றுக்கொள்வதும்; இனம், மொழி குறித்தெல்லாம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.


இம்முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் அதனுடைய விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்குமே.கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இது ஏதோ வெண்மணி விஷயத்தில் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1933-ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஆலப்புழை, திருநெல்வேலி ஆகியவிடங்களில் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்:"எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள்நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்கவேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம்கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள்.


முதலாளிகளுடன் கூலித்தக்கராறு என்பது, முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்'' (குடிஅரசு, 1.10.1933)."நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்கு கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படி செய்ய வேண்டும்'' என்ற பகுத்தறிவு கட்டுரையும் (2.12.1934) "முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்' என்ற 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானமும் "அரசாங்கத்தின் சலுகையால் முதலாளி வாழமுடிகிறது. ஆகையால் முதலாளி கூடாதென்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின்மீது திரும்பவேண்டு'மென்று பொன்மலையில் 27.9.1953 அன்று பேசியதும் இங்கு சேர்த்தெண்ணத்தக்கது.பெரியாரின் செம்பனார்கோயில் பேச்சிலிருந்து திராவிடக் கட்சிகளின்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை விளங்கிக்கொள்ள இயல்கிறது. அந்நம்பிக்கையும் சிதறுண்டுபோய் அவர் "ஓட்டுகளுக்காக கூட்டிக் கொடுக்கவும் செய்வார்கள்' என்று இறுதிக்காலத்தில் பேச வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி திராவிடக் கட்சிகள் ஆட்சியிலமர்ந்ததை சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியென அவர் கருதிக்கொண்டதும், அவர்கள் ஆட்சியிலிருப்பது சுயமரியாதை இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருக்குமென்பதும் அவர் நம்பிக்கைகளுக்கு காரணமாயிருந்தன.கம்யூனிஸ்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில் இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனீயத்திற்கு துணைசெய்வதே ஆகும். ஜாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளை புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment